என்றோ கேட்டபாடல் இன்று அவன் காதில் ஒலிக்கின்றது. இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் இந்த உலகத்திலே எவ்கே வாழ்கிறான்? அடுத்த வரிதான் வாடிப்பட்டி வடுகநாதனை சிந்ததிக்க வைத்தது. சிந்தித்தபடியே நண்பன் ராஜனுடன் அங்கிருந்த புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வடைமாலை சாத்தி சாமி கும்பிட்டுவிட்டு அங்கு கொடுத்த பிரசாதத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு கோவிலின் வெளிப்புறத்தில் அமர்ந்தான்.
நான் ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை, நான் நாத்திகன் ஆனேன் அவன் பயப்படவில்லை என்பவைதான் அவனை சிந்திக்க வைத்த வரிகள். அகப்படவும் இல்லை பயப்படவும் இல்லை என்பதுதான் இருக்கு ஆனா இல்லை என்ற தொணியை ஏற்படுத்துகிறது.
இடையில் ஒருவன் வந்து அதைத் தூக்கி உறுதி செய்யவருவான். தூக்கியவன் அலறி அடித்து தூக்கியும் எறியலாம். ஏன் எறிந்தான் என்றால் அதை பிடிக்கும்போது தொடுஉணர்ச்சியால் உணர்ந்ததுதான். அல்லது அதை தூக்கியவன் கையில் பிடித்து சுழற்றியபடி சிரிக்கவும் செய்யலாம். அதையும் அவன் தொடுஉணர்ச்சி உணர்த்தியதுதான்.
கீழே கிடப்பது பாம்பா கயிறா என்பதைப் பொருத்துத்தான் அது அமையும் என்று நினைத்தபடி அப்போது அர்ச்சனை செய்து
கொடுத்த வடைகளில் ஒன்றை பிட்டவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கை விரட்டியபடி,
“இந்த ஆஞ்சநேயர் அருளே அருள். கடவுள் இல்லை என்ற உன்னை எல்லாம் இங்கு வரவழைத்து விட்டான் அல்லவா?” என்றான் வடுகநாதன்.
“அதிலென்ன சந்தேகம் நீ நாத்திகன்தானே?”
“அரைவேக்காடு மாதிரி பேசாதே. போலி நாத்திகம் வேறு. உண்மையான நாத்திகம் வேறு”
“இதென்னடா புதுசா ஒரு குண்டத் தூக்கிப் போடுற?”
குண்டுமில்ல சட்டியுமில்ல. போலி நாத்திகம் என்றால் பிழைப்புக்காக கடவுள் இல்லை என்பது. உண்மையான நாத்திகம் என்றால் வேதத்தை ஏற்காதது. நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றி வந்து மொணமொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா என்பது உண்மையான நாத்திகம் என்றான் ராஜன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் யாரோ ஒருவர் கண்டுபிடித்தது அல்ல நாத்திகம். தமிழ்நாட்டில் பண்டைய காலத்திலேயே ஆத்திகம் போலவே நாத்திகமும் இருந்துள்ளது. கி. மு. ஆறாம் நூற்றாண்டில் அதிசகேச கம்பாளர் போன்றோரால் கண்ட உலகாயதம் எனும் நாத்திக கொள்கைகளை பெருவரியாக ஏற்றுள்ளனர்.
கி. பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் திருமூலரும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் சிவவாக்கிய சித்தரும் வாழ்ந்த காலத்தில் இருந்தே நாத்திகம் தமிழகத்தில் தொன்றுதொட்டே இருக்கிறது என்பதற்கு சான்றுகள் தேவையில்லை. உண்டென்பவர்களுக்கு ஒரு சித்தாந்தம் இருப்பதுபோல் இல்லை என்பவர்களுக்கான சித்தாந்தமே நாத்திகம். மற்றபடி நாத்திகம் என்பது தீண்டக்கூடாத முட்டாள்தனமோ மூடத்தனமோ அல்ல.
மற்றும் தமிழகத்தில் இருந்த ஆசீவகம் மற்றும் பூதவாதம் போன்ற தத்துவங்களே இதை மெய்ப்பிக்கும். தமிழ்நாடு மட்டுமின்றி உலகளாவிய அளவில் கிரேக்க நாட்டில் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இயற்கையையே இறைவனாக கொண்டுள்ளனர். சொல்லப் போனால் உன்னைத்தான் இறைவன் இல்லை என்பவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றான்.
ராஜன் சொன்னதைக் கேட்ட வடுகநாதன் அதிர்ந்தே போனான். அதைக்கண்ட ராஜன் டேய் ரொம்புவம் அதிர்ச்சி அடையாதே நெற்றி நிறைய விபூதி பூசியிருக்கும் நீ அந்த வள்ளலாரின் கொள்கையிலிருந்து விலகி நிற்கிறாயே என்றான். அதற்கு, என்னடா இது அடுக்கடுக்கா இப்படி முறையற்று பேசுகிறாயே என்றான் வடுகநாதன்.
அப்படியெல்லாம் இல்லடா. வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்றார் வள்ளலார். நீ என்னடா என்றால் குரங்குக்கு ஒரு துண்டு வடையை போட்டால் கெட்டா போய்விடுவாய்? அதை விரட்டுகிறாய் என்று விளக்கவே வடுகநாதன் அமைதியானவன் உன்னை எல்லாம் கடவுள்தான் காப்பாற்றணும் என்று மழுப்பினான்.
அதற்கு உன்னைத்தான் கடவுள் காப்பாற்றுவார் என்னைக் காப்பாற்ற மாட்டார். என்னை நான்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ராஜனிடம் அப்படியெல்லாம் இல்லை நீ கடவுளைப்பற்றி
எண்ணாவிட்டாலும் நாமெல்லாம் வாசுதேவ குடும்பம் அதனால் கடவுள் உன்னையும் காப்பாற்றுவார் என்றான்.
“டேய் இரு, இரு என்ன சொன்ன, வாசுதேவ குடும்பமா? நான் சொக்கலிங்கம் குடும்பம். என் அப்பா பெயர் சொக்கலிங்கம். இப்ப சிலர் தன்னை அப்பா என்று சொல்லிக்கொண்டு திரிவதுபோல் நீ வாசுதேவ குடும்பம் என்று சொல்லித்திரிய ஆரம்பித்து விட்டாய் போல கிடக்கு. முருகனையே ஏமாற்றிய அப்பா சிவன் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்?”
“சிவன் எப்போது முருகனை ஏமாற்றினார்?”
“சிவனும் பார்வதியும் சேர்ந்து உலகைச் சுற்றிவர பிள்ளையாரிடமும் முருகனிடமும் சொல்லிவிட்டு பிள்ளையாரிடம் பழத்தைக் கொடுத்ததை ஏமாற்று வேலையில்லையா?”
“ராஜா, இங்கதான் ஒன்றை நீ புரிந்து கொள்ள வேண்டும். அங்கு நடந்தது இருவருக்கும் வைத்த போட்டி”
“டேய், அந்த கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும். போட்டி என்றால் அதற்கு ஒரு விதிமுறை வேண்டாமா? ஒரு கால் ஊனமானவனையும் கால்கள் நன்றாய் இருப்பவனையும் ஓட விடுவாதா போட்டி. முருகன் மயிலில் ஏறி சிட்டு போல் பறப்பவர். பிள்ளயாரோ பெருச்சாளிமேல் ஏறி ஊர்ந்து கொண்டல்லவோ இருப்பார்?”
“இதாண்டா உன்கிட்ட இருக்கிற குறை. டேய் அது உடல் சம்பந்தமான போட்டியல்ல. மூளை சம்பந்தமான போட்டி” என்றான் வடுகநாதன்.
அப்பா, அறிவாளி மூளை சம்பந்தமான போட்டி நடத்தினான் சிவன் என்று எப்படி சொல்கிறாய்? அப்படிப்பட்டவர் முருகனை தோளில் சுமந்து அவனிடம் ஏன் பாடம் கேட்டார் என்று ராஜன் கேட்கவும் நீ எப்பவும் இப்படித்தான் குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்பாய் என்று ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
ஒன்றுமில்லா வாய்க்கு மெல்ல அவல் கிடத்தமாதிரி வடை கிடைக்க வடைகள் தீர்ந்து போனதும் படிப்பது ராமாயாணம் இடிப்பது பெருமாள் கோவிலா என்பதுபோல் இருப்பது கோவில் பேசுவது நாத்திகமா என்று சொல்லியபடியே எழுந்தனர்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றபடியே எழுந்தான் ராஜன். துரத்தியும் மீண்டும் அங்கு வந்த நின்ற குரங்கை வடுகநாதன் திரும்பவும் விரட்டினான். ஆனால் கையில் மீதமிருந்த வடைத்துண்டை ராஜன் போடவும் அதைத் தூக்கிக்கொண்டு குரங்கு அங்கிருந்து ஓடிற்று. ஓடிகின்ற குரங்ககைப் பார்த்தபடியே நின்ற அவனுக்கு இறைவன் எங்கிருக்கிறான் என்ற சிந்தனைக்கு விடை தெரிந்தது.
- சங்கர சுப்பிரமணியன்.
.png)
No comments:
Post a Comment