இயற்றியவர் - கலாநிதி பாரதி இளமுருகனார்.
பேதை மனிதா வாதை ஏனோ?;!
மேதை நீயும் கலங்க லாமோ?
கோதை தந்தது துயரந் தானோ?
மாதை நம்பிப் பெற்ற பரிசோ?
சூது வாது சோலி களவு
ஏதும் அறியாப் பிள்ளை அலவோ?
சோத னைக்குப் பலியா கினையோ?
ஆதர வுனக்கு ஆர்தரு வாரோ?
கணத்திற் பிறந்த காத லாலே
சுணக்க மின்றி மணமுடித் தாயே!
பணத்தி னாலோ இணக்க மின்றிப்
பிணக்கப் பட்டுப் பிரிந் தேனோ?
நண்பா நண்பா!
கண்ணியம் காதல் கடமை என்றாய்!
கணக்குப் பார்த்தா கவலை தந்தாள்;?
பணத்தைப் பெரிதாய் நினைத்தோ அவளும்
பெண்மை மறந்து பிரிந்தா சென்றாள்?
கண்ணின் மணியெனக் காத லித்துநீ
எண்ணி எழுப்பிய காதல் மாளிகை
மண்ணினில் இடிந்து விழுந்திடக் கண்டாய்!
பெண்ணவள் செய்தது துரோகம் அல்லவோ?
வஞ்சகம் செய்தவள் வசைபா டுகிறாள்!
வாழ்க்கை கொடுத்தநீ வாடியே
நிற்கிறாய்!
கொஞ்சமும் நெஞ்சிலே ஈரமும் இல்லையே!
கெடுமை கொடுமை எப்படிச் சொல்வனோ!
திசைமாறிய பறவைஉன் நிலையா?
வசைகேட்பதுன் வழக்கத்தி லொன்றா?
அசையும் பொருள்கள் யாவும் என்றோ
அழிவது உண்மை உணர்வாய்! உணர்வாய்!
வந்த வழியைத் திரும்பிப் பாராய்!
சிந்துங் கண்;ணீர் சீர்செய் திடுமோ?
சொந்த பந்தம் மாயை அன்றோ?
இந்த நிமிடம் என்ன செய்வாய்?
வேதனை தானுன் சாதனை யாமோ?
விரக்தி வேண்டாம்! மனத்தைத் தேற்று!
ஆதர வாக நானிருக் கின்றேன்!
அமைதி கொண்டே வாழ்வில் உயர்வாய்!
அறத்தை ஆற்ற அன்று மறந்தாய்
இன்று உணர்ந்தாய் இனிதே செய்வாய்!
மன்று ளாடி அருளை வேண்டி
வென்றே உயர நன்றே செய்வாய்!
சிந்திப்பாய் நண்பா! சிந்திப்பாய்!
கூண்டுக் கிளிபோல் ஆகி விடாதே!
வேண்டா நினைவை நீக்கி விடடா
மீண்டும் மிடுக்குத் தொடர வேண்டும்!
ஆண்டவன் பாதம் தொழுதே எழுவாய்!
குழந்தை மனத்தோய் கோழை யாநீ
எழுவாய்! சலனம் என்றும் வேண்டாம்
வளம்பெற உனக்கு வழியா இல்லை?
இழந்தவை கொண்டு வளம்பெற வாழ்வாய்!




No comments:
Post a Comment