சாது மிரண்டால் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் உச்ச இயக்குநராகத் திகழ்ந்தவர் ஏ. பீம்சிங். எம் ஜி ஆர் தவிர்த்து இவர் இயக்கத்தில் எல்லா நடிகர்களும் நடித்திருப்பார்கள் எனலாம். குடும்பக் கதைகளை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்டு இவர் இயக்கிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன . 


 இந்த பீம்சிங் அறுபதாம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஹிந்திப் பட இயக்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனாலும் இவரை நம்பி பல நடிகர்களும் , தொழில் நுட்ப கலைஞர்களும் தமிழ் சினி உலகில் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு தொடர்ந்து தொழில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சன்பீம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சிறிய பஜெட்டில் படங்களை தயாரிக்கத் தொடங்கினார். அப்படி அவர் தயாரித்த முதல் படம் தான் சாது மிரண்டால்.

 பலருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு

கதையை தேர்ந்தெடுத்து அதற்கு திரைக் கதையையும் எழுதினார் பீம்சிங். படத்தின் கதை நாயகனாக டி . ஆர். ராமச்சந்திரன் நடிக்க , படத்தின் ஹீரோவாக நாகேஷ் நடித்தார். 

 ஓய்வு ஒழிவின்றி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷை எப்படியோ இதில் ஹீரோவாக்கினார் பீம்சிங். அகில இந்திய நடிகையான வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்பட ஜோடியான டி .ஆர் . ராமச்சந்திரன் இதில் நகைச்சுவை நடிகராக அல்லாது சீரியஸ் பாத்திரத்தில் நடித்திருந்தார். 

 சிறு வயது முதலே நண்பர்களான பசுபதியும் , நரசிம்மனும் வாழ்க்கை ஓட்டத்தில் பிரிந்து பல காலம் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள். மனைவியை இழந்து இரு குழந்தைகளுடன் வங்கியில் தொழில் புரிந்து வாழும் பசுபதி தன் நண்பனுக்கு தனது இல்லத்தில் தங்க இடம் கொடுக்கிறான். நண்பனோ பசுபதியை ஏமாற்றி அவன் பணி புரியும் வங்கியை கொள்ளையடித்து விடுகிறான். இதன் பொருட்டு உருவாகும் தகராறில் பசுபதி நரசிம்மனை சுட்டு கொன்று விடுகிறான். அவனின் பிணம் கபாலியின் டாக்சியின் பின் சீட்டில் சரிந்து கிடக்கிறது. அது தெரியாமல் கபாலி டாக்சியில் சவாரி ஏற்றுகிறான். டாக்சியில் ஏறுபவர்கள் பிணத்தைப் பார்த்து மிரண்டு தலை தெறிக்க ஓடுகிறார்கள். கபாலியோ விபரம் தெரியாமல் பிணத்துடன் டாக்சியில் சுற்றுகிறான்! 

 
இப்படி அமைந்த படத்தில் பசுபதியாக டி .ஆர் . ராமச்சந்திரன் நடித்து பாத்திரத்துக்கு ஏற்ற தெரிவாக அமைந்தார் . வழமையான நகைச்சுவை நடிப்புக்கு பதில் இரு குழந்தைகளுடன் , நண்பனின் மோசடிக்கு பலியாகி தவிக்கும் அவரின் நடிப்பு மனததைத் தொட்டது. அவர் நடித்த படங்களுள் இது அவருக்கு ஒரு மைல் கல். 

 அதே போல் வில்லனாக வரும் ஓ .ஏ .கே .தேவர் முதல் பாதிப் படத்தில் செய்கையாலும் , பார்வையாலும் மிரட்டுகிறார். மீதி படத்தில் பிணமாக நடித்து பயமுறுத்துகிறார். அவருக்கும் இது ஒரு மாறுதலான படம். 

 இவர்களுடன் படம் முழுதும் சக்கை போடு போடுகிறார் நாகேஷ்.

என்ன துடி துடிப்பு , ஆர்ப்பாட்டம், வேகம், நடன அசைவுகள் அசால்ட்டாக நடித்து கவருகிறார். 

 அவருக்கு ஈடு கொடுக்கும் மனோரமாவும் கவருகிறார். இவர்களுடன் டீ .எஸ் .பாலையா, எஸ் .வி . சகஸ்ரநாமம், நம்பிராஜன், ஏ. வீரப்பன் . ராமராவ் , உசிலைமணி என்று ஒரு கோஷ்டியே படத்தில் நடித்தனர். 

 படத்தின் கதை வசனம் உசிலை சோமநாதனால் எழுதப்பட்டது. சீரான வசனங்கள். பாடல்களை ஆலங்குடி சோமு, தஞ்சைவாணன் இருவரும் எழுதினார்கள். டி .கே . ராமமூர்த்தி இசையமைத்தார். பாலமுரளி கிருஷ்ணா குரலிக் அருள்வாயே நீ அருள்வாயே பாடல் பாகாய் உருக்கியது. ஏ .எல் . ராகவனின் நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம் பாடலில் கருத்து சூப்பர். 

 பீம்சிங்கின் நிரந்தர ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ் படத்தை

ஒளிப்பதிவு செய்தார். பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்களான திருமலை , மகாலிங்கம் இருவரும் . படத்தை டைரக்ட் செய்தனர். 

 இவர்களில் திருமலை கிருஷ்ணன் பஞ்சு இருவரில் ஒருவரான
கிருஷ்ணனின் சகோதரராவர். ஆரம்பத்தில் கிருஷ்ணனிடமும் பிறகு பீம்சிங்கிடமும் உதவியாளராக பணியாற்றி விட்டு , பீம்சிங்கின் மற்றும்மொரு உதவியாளரான மகாலிங்கத்துடன் சேர்ந்து இப் படத்தை டைரக்ட் செய்தார். 

 முதல் படத்திலேயே நகைச்சுவை, திகில் , பாசம் என்று எல்லாவற்றையும் சேர்த்து இயக்கி வெற்றி பெற்றார்கள் இவர்கள். பின்னர் இந்த படம் பீம்சிங் இயக்கத்தில் மெஹ்மூத், பாரதி, கிஷோர்குமார், பிரான், நடிப்பில் Sadhu Aur Shaitaan என்ற பேரில் ஹிந்தியிலும் படமாகி வெற்றி கண்டது.

No comments: