உலகச் செய்திகள்

உக்ரைனில் பாய்ந்தது ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஏவுகணை! - 4 பேர் பலி ; 100 பேர் காயம்

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியது

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 12 பேர் பலி 


உக்ரைனில் பாய்ந்தது ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஏவுகணை! - 4 பேர் பலி ; 100 பேர் காயம் 

25 May, 2026 | 12:05 PM

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கீவ் தலைநகரின் வான்பரப்பில் ஏவப்பட்ட ரஷ்யாவின் அதி நவீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் (Oreshnik hypersonic) ஏவுகணை அப்பகுதியில் பாரியளவில் தாக்கியுள்ளது. இது, கடந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதலாக கருதப்படுகிறது. 

இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து அழிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும் விண்கல் போல மிக அதிக வேகத்தில் பயணிப்பதால் எந்தவொரு வான்பாதுகாப்பு அமைப்பாலும் இதை தடுத்து அழிக்க முடியாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் குறிப்பிட்டுள்ளார். 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கீவ் தலைநகரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோதும் பிற பகுதிகளும் ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்டவண்ணமிருந்ததாகவும் பெரிய கட்டடங்கள், ஒரு பாடசாலை, ஒரு திரையரங்கு, அருங்காட்சியகம் என்பன இதில் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உக்ரைன், ரஷ்யாவின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 




தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியது 

Published By: Vishnu

26 May, 2026 | 06:20 AM

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கப் பயன்படுத்தப்படும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் கூறியுள்ளார்.

இருப்பினும், தற்போதைய போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மிகுந்த நிதானத்துடன் செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், இந்த அமைதி ஒப்பந்தம் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 






லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 12 பேர் பலி 

26 May, 2026 | 03:07 PM

லெபனான் நாட்டில் இஸ்ரேல் இன்று (26)  நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லெபனானின் கிழக்கு பகுதியில் பிஹா பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எத்தனை ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

ஹிஸ்புல்லா குழுவை நோக்கி லெபனான் முழுவதும் மிகவும் தீவிரமான தாக்குதல்களை நடத்துவதற்குத் தான் ஒப்புதல் அளித்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறியதைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 








No comments: