தியானத்தில் ஒழுக்கமும் திருப்தியும்

 தியானம் செய்வதில் ஒழுக்கம் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். உண்மையில், தியானத்திற்கு மிக முக்கியமானதும் அத்தியாவசியமானதும் ஒழுக்கமே ஆகும். ஆன்மிக சாதகர் ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடித்தால், அவர் விரைவில் வெற்றியை அடைய முடியும்.

தியானம் என்பது பவ ரோகம் (சம்சார வாழ்க்கை எனும் நோய்) என்பதற்கான முதன்மையான மருந்தாகும். அதனுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான குணம் “திருப்தி” ஆகும். மனதில் திருப்தி இருந்தால், வாழ்க்கை முடிவற்ற ஆனந்த விழாவாக மாறும்.

ஆசைகள் மனதை அலைபாயச் செய்கின்றன. ஆசை என்பது உடலினுள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றது; அது மனிதனை மெதுவாகவும் உறுதியாகவும் அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும். ஆசைக்கு எதிரான மருந்து திருப்தியே ஆகும். திருப்தியால் கிடைக்கும் ஆனந்தமே தியானத்திற்கான அரசபாதையாகும்.

எவ்வாறு வெயிலின் கடும் வெப்பத்தில் பல மைல்கள் நடந்து களைத்துப் போன ஒரு பயணி, குளிர்ச்சியும் நிழலும் நிறைந்த தெளிந்த நீருள்ள ஏரியில் நீராடும்போது அமைதியையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறானோ, அதுபோல ஆசைகளின் கொதிக்கும் வெப்பத்தில் வாடித் தவிக்கும் மனிதனும், திருப்தி என்னும் ஏரியில் மூழ்கி நீராடும்போது முழுமையான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைகிறான்.

No comments: