பம்பலப்பிட்டி ஶ்ரீ கதிரேசன்
மண்டபம். கலா ரசிகர்கள் நிறைந்திருந்திருந்த
அங்கே மேடையேறிய ஏகலைவன் கூத்தின் இறுதிக்காட்சி.
“ ஏழை மக்கள் எம்மை, வாழ விடா, வாழவிடா இந்த ஆளும்
அரசர் ஓர் நாள், ஆளும் அரசர் ஓர் நாள் அழிந்துபோவார்.
ஆண்ட பரம்பரைகள், ஆண்ட பரம்பரைகள் பூண்டோடு ஓர் நாள் மாண்டு மடிந்து
போகும். மாண்டு மடிந்துபோகும் மண்ணை விட்டே !
ஏழைகள் எழுச்சி பெற்று – ஓர் நாள் ஆள்வோரை அழித்தொழிப்பார், நிச்சயம் அழித்தொழிப்பார். “
அரங்கில் அமர்ந்திருந்த
அனைவரும் எழுந்து நின்று உணர்ச்சிப்பெருக்கோடு கரகோஷம் எழுப்புகின்றனர்.
நான் அன்று பார்த்த கூத்து
அரங்காற்றுகைதான் ஏகலைவன். எழுதி ,
இயக்கியவர்
இளைய பத்மநாதன் என்ற கலைஞர்.
குறிப்பிட்ட அரங்காற்றுகை
1980 களில் இடம்பெற்றதாக நினைவு. வீரகேசரியில்
பணி முடிந்து, நண்பர் தனபாலசிங்கத்துடன் அந்த மண்டபத்திற்கு விரைந்தேன்.
தோழர் சண்முகதாசனும் வந்திருந்தார்.
அரங்கம் நிறைந்த கலா ரசிகர்கள். இறுதிக்காட்சி உணர்ச்சிபூர்வமாக அமைந்திருந்தது.
ஏகலைவன், விரல் வெட்டப்பட்ட தனது கையையும் துரோணரையும் பார்க்கின்றான்.
அந்த அரங்காற்றுகை முடியும்போது
இரவு ஒன்பது மணியுமாகிவிட்டது. நான் எங்கள் நீர்கொழும்பூருக்குச் செல்வதற்கு பஸ்ஸை
பிடிக்கவேண்டும்.
ஏகலைவனின் இயக்குநர் பத்தண்ணாவை
அன்று என்னால் சந்திக்க முடியாது போய்விட்டது.
எதிர்பாராத நிகழ்வுகளின்
சங்கமம்தானே வாழ்க்கை. பத்தண்ணாவை காலம் கடந்து,
1994 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் சந்திக்கின்றேன்.
அவ்வேளையில் அவர் நாடகக்
கலைஞர் மாவை நித்தியானந்தன் மெல்பனில் ஆரம்பித்திருந்த பாரதி பள்ளியில் மாணவர்களுக்கு
நாடகப்பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்.
இலங்கையில் வடமராட்சிப்பிரதேசம், பல ஆற்றல் மிக்க கல்விமான்களையும் கலைஞர்களையும்
படைப்பிலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் எங்கள் தேசத்திற்கு வழங்கியிருக்கிறது.
அறிஞர் கந்த முருகேசனார்,
கலைஞர் கிருஷ்ணாழ்வார், பேராசிரியர் கா. சிவத்தம்பி,
எழுத்தாளர்கள் செ. கதிர்காமநாதன், ராஜஶ்ரீகாந்தன் , தெணியான் ஆகியோர் முதல் பல ஆளுமைகளை நாம் பட்டியலிடலாம்.
அந்த வரிசையில் நாம் வியந்து பார்க்கும் கலைஞர்தான் பத்தண்ணா என அனைவராலும் அன்போடு
அழைக்கப்படும் அண்ணாவியார் இளைய பத்மநாதன்.
1937 ஆம் ஆண்டு வடமராட்சி – நெல்லியடியில் பிறந்திருக்கும்
அவர், கொழும்பில் எழுதுவினைஞராக பணியாற்றியவர்.
வடபுலத்தில் தீண்டாமை ஒழிப்பு
இயக்கம் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் அங்கிருந்த கலைஞர்களினால் உருவாக்கப்பட்டிருந்த
அம்பலத்தாடிகள் என்ற கலைக்குழு, கிராமங்கள் தோறும் அரங்காற்றுகை செய்த பிரபல்யமான
கந்தன் கருணையை மூத்த தலைமுறையினர் மறந்திருக்க
மாட்டீர்கள். இதிலும் பத்தண்ணாவின் வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏகலைவன் ரூபவாகினியிலும்
ஒளிபரப்பாகியது. அதனை கொட்டாஞ்சேனையில் தகவம்
ராசையா மாஸ்டரின் இல்லத்திலிருந்து ஒரு நாள் இரவு, அவரின் குடும்பத்தினர் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ்
– மனோன்மணி தம்பதியருடன் இருந்து பார்த்து ரசித்தேன்.