உலகச் செய்திகள்

அமெரிக்கா - ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி உடன்படிக்கை ; முழுமையான விபரங்கள் இதோ!

ஈரானின் உச்ச தலைவரை அமெரிக்க அதிபர் கடுமையாகச் சாடினார்

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல் : அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

சுவிட்சர்லாந்தில் இன்று நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென இரத்து

ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி     


அமெரிக்கா - ஈரான் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 அம்ச அமைதி உடன்படிக்கை ; முழுமையான விபரங்கள் இதோ!

Published By: Digital Desk 3

18 Jun, 2026 | 01:33 PM

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கவும், உலக வர்த்தகத்தின் முக்கிய நரம்பாகக் கருதப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதையை மீண்டும் திறப்பதுமான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேச்சுவார்த்தைக் குழுவும் ஈரானும் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளன.

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டில் வைத்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு அவர் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த 14 முக்கிய அம்சங்கள் 

1. இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தம்:

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்பட வேண்டும். (ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமித்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது).

2. இறையாண்மைக்கு மதிப்பளித்தல்:

அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன், இரு நாடுகளும் மற்றொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. இறுதி ஒப்பந்தத்திற்கான காலக்கெடு:

இரு நாடுகளும் அதிகபட்சமாக 60 நாட்களுக்குள் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தவும், அதனை நிலைநாட்டவும் கடமைப்பட்டுள்ளனர். இரு தரப்பு பரஸ்பர சம்மதத்துடன் இந்த 60 நாள் காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியும்.

4. கடல்சார் முற்றுகை மற்றும் அமெரிக்க படைகள் மீளப்பெறுதல்:

ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் விதித்துள்ள கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கத் தொடங்கும். இது 30 நாட்களுக்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்படும். மேலும், இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட 30 நாட்களுக்குள் ஈரானின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தனது படைகளை அமெரிக்கா மீளப் பெறும். பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நிலைப்பாடு போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும்.

5. ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து:

ஹோர்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு , அதன் வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதாக ஈரான் உறுதியளித்துள்ளது. வளைகுடா நாடுகள் இணைந்து சுதந்திரமான கப்பல் போக்குவரத்திற்கான விரிவான ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படும்.


6. 300 பில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்பு நிதி:

ஈரானின் பொருளாதார மேம்பாடு மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் குறைந்தபட்சம் 300 பில்லியன் டொலர் (£225 பில்லியன்) மதிப்பிலான பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இறுதித் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கும். இருப்பினும், இதில் ஒரு டொலர் கூட அமெரிக்கப் பணமாக இருக்காது (வளைகுடா நாடுகளே இதற்கு நிதியளிக்கும்) என அமெரிக்க அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

7. அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கம்:

இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டவுடன், ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் உட்பட ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நிறுத்த அமெரிக்கா உறுதியளித்துள்ளது. தடைகளை நீக்குவதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

8. அணு ஆயுதக் கட்டுப்பாடு (மிக முக்கிய வெற்றி):

ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை வாங்கவோ அல்லது தயாரிக்கவோ மாட்டாது என இந்த எட்டாவது புள்ளியில் திட்டவட்டமாக மறுஉறுதி செய்துள்ளது. மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ், தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை இருதரப்பு ஒப்புதலுடன் அழிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு கிடைத்த "மிகப் பெரிய வெற்றி" என வெள்ளை மாளிகை வர்ணித்துள்ளது.

9. தற்போதைய நிலவரத்தை நீடித்தல் :

இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நிலைப்பாடு ஆகியவற்றில் தற்போதைய நிலையே நீடிக்கும். இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டு எந்தவொரு புதிய இராணுவ வளங்களையும் பயன்படுத்தாது.

10. ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி:

ஈரானிய மசகு எண்ணெய் , பெற்றோலியப் பொருட்கள் மற்றும் அதன் வழித்தோன்றல்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளில் இருந்து அமெரிக்கா விலக்கு அளிக்கும். இதனுடன் தொடர்புடைய வங்கிப் பரிவர்த்தனைகள், காப்பீடுகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.

11. முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிப்பு:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டவுடன், அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சில நிதி மற்றும் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கும்.

12. கண்காணிப்பு வழிமுறை:

இந்த ஒப்பந்தத்தின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் எதிர்கால இணக்கப்பாடுகளைக் கண்காணிப்பதற்கான ஒரு கூட்டு "கண்காணிப்பு வழிமுறையை" இரு நாடுகளும் நிறுவும்.

13. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், இரு நாடுகளும் மற்ற பத்திகளில் உள்ள விபரங்கள் குறித்து மட்டுமே பிரத்தியேகமாக இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்.

14. ஐநா பாதுகாப்புச் சபையின் அனுமதி:

இறுதியாக எட்டப்படும் முழுமையான இறுதி அமைதி உடன்படிக்கையானது, ஐநா பாதுகாப்புச் சபையின் பிணைப்புமிக்க தீர்மானத்தின் மூலம் ஆதரிக்கப்பட்டு சர்வதேசச் சட்டமாக்கப்படும்.

நன்றி வீரகேசரி 






ஈரானின் உச்ச தலைவரை அமெரிக்க அதிபர் கடுமையாகச் சாடினார்

Published By: Vishnu

20 Jun, 2026 | 06:19 AM

சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா அல் கமெனி தெரிவித்த ஒரு கருத்து குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது 'ட்ரூத்' (Truth) கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"ஏமாற்றத்தின் காரணமாகவே அமெரிக்கா ஈரானுடன் சமாதானப் பாதையில் நுழைந்தது" என்று உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த டிரம்ப், அந்த ஏமாற்றம் ஈரானுடையது, தன்னுடையது அல்ல என்று கூறியுள்ளார்.

"அவர்கள் முடித்துவிட்டார்கள் - இந்த 60 நாள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம்," என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.   நன்றி வீரகேசரி 




இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல் : அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

Published By: Digital Desk 1

20 Jun, 2026 | 12:28 PM

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இடைக்கால அமைதி உடன்படிக்கையை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 4 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

லெபனானில் அண்மைய நாட்களாக தீவிரமடைந்திருந்த மோதல்கள், மத்திய கிழக்கின் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய நிலையிலேயே இந்த அவசர முடிவு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவரான ஸ்டீவ் விட்கோஃப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக சுவிட்சர்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.

லெபனான் மோதல் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை இரத்து செய்திருந்த நிலையில், தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இந்த போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாம் இஸ்ரேலிய தரப்புடன் பேசி இந்த போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

பதற்றமான சூழலில் சில நேரங்களில் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேரடியாகப் பேசினாரா என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் தூதர்கள், ஈரானின் ஒத்துழைப்புடன் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை வடிவமைத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய அதிகாரிகளும், ஹிஸ்புல்லா தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

எனினும், ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தாத வரை தங்களுக்கு இது போர்க்காலம் அல்ல என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், தெற்கு லெபனானில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து தங்களது படைகளை தற்போதைக்கு விலக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் இஸ்ரேல் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 47 லெபனானியர்கள் கொல்லப்பட்டதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். 

மறுபுறம், லெபனானில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் தனது இராணுவ வீரர்கள் நால்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரம்பியோ ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன், ஜூன் 23 முதல் 25 வரை வொஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் போரினால் இதுவரை 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்திற்கான பிரதான பாதையான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 




சுவிட்சர்லாந்தில் இன்று நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென இரத்து 


Published By: Digital Desk 3

19 Jun, 2026 | 11:37 AM

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகிலுள்ள பர்கன்ஸ்டாக் மலை உச்சி ரிசார்ட்டில் இன்று வெள்ளிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  

எனினும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான தனது சுவிஸ் பயணத்தை திடீரென இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவுமூ நள்ளிரவில் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்றையதினம்  திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்பதை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சகமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.  

கடந்த  17 ஆம் திகதி  பிரான்ஸின் வெர்சாய்ஸ் நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தகட்ட இறுதி உடன்பாட்டை எட்ட 60 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட அமர்வாகவே இந்த பர்கன்ஸ்டாக் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.  

ஈரானிய துறைமுகங்கள் மீதான கடல்சார் தடைகளை அமெரிக்கா நீக்குவது, ஹோர்முஸ் நீரிணையை  மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பது மற்றும் ஈரானுக்கு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்குவது போன்றவை இந்த 14 அம்ச வரைவு ஒப்பந்தத்தில் அடங்கும்.  

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இப்பேச்சுவார்த்தையை முற்றிலுமாக கைவிடவில்லை எனவும், தற்காலிகமாக மட்டுமே தனது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளார் எனவும் வெள்ளை மாளிகை தரப்பு விளக்கியுள்ளது. "இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் தளவாட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Logistics) ஒருபோதும் எளிமையானதாகவோ அல்லது எளிதில் கணிக்கக்கூடியதாகவோ இருப்பதில்லை" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், இந்த உடன்படிக்கை ஏதேனும் ஒரு தரப்பால் மீறப்பட்டால், ஈரானின் பதில் "மிகவும் தீர்க்கமானதாக" இருக்கும் என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் சுவிஸ் அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, அடுத்த சில நாட்களில் மாற்றுத் தேதிகளில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி 





ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்  


18 Jun, 2026 | 02:37 PM

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஒரு வாரத்தில் 2வது முறையாக இத்தகையதொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதலால் மொஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை நள்ளிரவில் மொஸ்கோவை நோக்கி ஏவப்பட்ட 200 ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன. எனினும், பல பகுதிகளில் உக்ரைன் நாட்டிலிருந்து ஏவப்பட்ட 555 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 





ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்; போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி     

Published By: Vishnu

21 Jun, 2026 | 09:18 AM

ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியதற்குப் பதிலடியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

குறிப்பாக லெபனான் பிராந்தியத்தில், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று ஈரானிய பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன.   நன்றி வீரகேசரி 






No comments: