கண்ணதாசன் கவிதைக்கு ஈடுஇணை உண்டோ
எண்ணவெண்ண முடியாத எத்தனையோ தந்தான்
வண்ணத் தமிழாலே வாழ்வினையே வடித்தான்
வரகவியாய் கண்ணதாசன் மழையாகப் பொழிந்தான்
தொட்டிலுக்கும் பாடினான் கட்டிலுக்கும் பாடினான்
கெட்டதுக்கும் பாடினான் கெடுமதிக்கும் பாடினான்
பட்டிதொட்டி உள்ளாரும் படிப்பதற்கும் பாடினான்
படியாதார் பயனாகும் பாங்கினிலே பாடினான்
சமதர்மம் பாடினான் சன்மார்க்கம் பாடினான்
அவனிக்கு உகந்ததாய் ஆராய்ந்து பாடினான்
பண்ணெடுத்துப் பாடினான் பண்பாட்டைப் பாடினான்
கம்பனாய் மாறுவான் காளிதாசனாய் ஆகுவான்
சீதையொடு சகுந்தலையைச் சிறப்பாகப் பாடுவான்
சந்தமாய் பாடுவான் தாளமொடு பாடுவான்
செந்தமிழின் வகையெல்லாம் தேர்ந்தெடுத்துப் பாடுவான்
சொந்தக்கதை சோகக்கதை சொக்கவைக்கச் சொல்லுவான்
தோலுரித்துக் காட்டிகின்ற வகையினிலே சொல்லுவான்
மந்தகதி உள்ளார்கள் மாறிவிட வேண்டுமென்று
வண்ணத் தமிழாலே வடிவாகச் சொல்லுவான்
காதலையும் சொல்லுவான் காமத்தையும் சொல்லுவான்
கத்திமுனை நடப்பதுபோல் கவனமாய் சொல்லுவான்
கண்ணியமாய் சொல்லுவான் கருத்திருத்தச் சொல்லுவான்
கண்ணதாசன் கவித்துவமோ கலைமகளின் அருளாகும்
ஆழ்வார்கள் வருவார்கள் அரனடியார் வருவார்கள்
ஐயன் வள்ளுவனும் அவன்பாட்டில் வந்திடுவார்
சித்தர்களின் கருத்துவரும் திருவாசகத் தேனும்வரும்
கண்ணதாசன் கருத்தினிலே வந்தமர்வார் அனைவருமே
கவியரசர் கண்ணதாசன் கவிதைகளில் வாழுகிறார்
அவர்படைத்த அத்தனையும் அன்னைத்தமிழ் சொத்தாகும்
கவியரசர் வசனநடை கவிபோல சுவைபயக்கும்
அர்த்தமுள்ள இந்துமதம் அனைவருக்கும் பயனாகும் !
.jpeg)

No comments:
Post a Comment