சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 9…..சங்கர சுப்பிரமணியன்.

 அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம். நாரா. நாராவில் நாரா


பூங்கா மற்றும் டோடைஜி டெய்ஷா, கசூகா டெய்ஷா என்று இரு புத்த ஆலயங்கள். இவற்றுள் நாரா பூங்கா மான்களுடனும் டோடைஜி டெய்ஷா இந்தியாவுடனும் சம்பந்தப் பட்டுள்ளன. புத்த மதமே இந்தியாவோடு சம்பந்தப் பட்டிருக்கும்போது  டெய்ஷா சம்பந்தப்பட்டிருப்பதில் வியப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது என்கிறார் மாடசாமி அண்ணாச்சி.


இந்த மாடசாமி அண்ணாச்சியை பக்கத்தில் வைத்துக் கொள்வது பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது மாதிரிதான். நாலும் தெரிந்தவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலே இதே கதிதான். அதனால்தான் சற்று விபரமானவர்கள் தம்மைவிட அறிவாளிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ள மாட்டார்களோ?

ஆனால் நான் அவரை தொல்லையாக நினைக்கவில்லை.

அவரிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்கிறேன். இன்னொன்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டன். நான் ஜப்பானில் இருக்கும்போது ஒவ்வொன்றையும் அவருக்கு அவ்வப்போது சொல்லவேண்டும் என்றொரு அன்புக்கட்டளை. அப்படி அப்பேட் செய்யும்போது அவர் சொன்னது என்னை சிந்திக் வைத்தது.

அப்டேட் பண்ணியதற்கு அவர் என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். நான் பியூஷிமி இளாரி டெய்ஷா சென்றதைச் சொன்னபின் நாராவிலுள்ள இரண்டு டெய்ஷாக்களைப் பற்றிச் சொன்னதும் அவர் கேட்ட கேள்வி நீ சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாயா அல்லது புனித யாத்திரையா என்றதுதான். 

ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட கோவில்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கவா முடியும்
என்றார்.அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது. ஆதலால் நாராவிலுள்ள கசூகாவிலுள்ள கோவிலுக்கு என் தரிசனம் கிட்டாமல் போனது. 

Okஇப்போது இனாரியிலிருந்து நாரா செல்வோம். கோவிலில் இருந்து ஐந்து நிமிட நடைதூரத்திலுள்ள இனாரி தொடர்வண்டி நிலையத்தை அடைந்து அங்கிருந்து நாராவுக்கு JR West ஆல் இயக்கப்படும் நாரா செல்லும் உள்ளூர் தொடர்வண்டயில் ஏறினோம்.

ஒரு மணி நேர பயணத்துக்குப் பின் ஹெஞ்சோ ஹிஹாஷி செல்லும் அந்த தொடர்வண்டியில் நாரா தொடர்வண்டி நிலையம் அடைந்தோம். அங்கிருந்து நாராபார்க் செல்ல கிழக்கு பாதை வழியாக  சென்று  பேருந்து 97 ல் ஏறி ஏழு நிமிடப் பயணத்துக்குப் பிறகு ஹெஞ்சோ-மீ பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். 

நாராபூங்காவின் சிறப்பு அங்குள்ள மான்கள் தான். பார்க்கும் இடங்களெல்லாம் மான்கள் வலம் வந்து கொண்டிருந்தன. பூங்காவில் நடந்து போகும் பாதைகளில் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தன. இந்த மான்கள் உங்களைத்தேடி வரும். நீங்கள் அதனிடம் செல்ல வேண்டியதில்லை. அப்படி அதற்கு தீனி கொடுத்து பழக்கப் படுத்தியுள்ளனர்.

மானுக்கு தீனிபோட அங்கே பிஸ்கட் போன்ற தீனியை விற்றுக்

கொண்டிருப்பார்கள். விலை 200 யென் வரை இருக்கிறது. தீனிபோட ஆரம்பித்தவுடன் கூட்டமாக உங்களை நோக்கி படையெடுக்கும். படம் எடுக்க உங்களோடு ஒத்துழைக்கும். இவ்வாறு அந்த மான்களுடன் படம் எடுப்பதற்கும் தீனி போடுவதற்கும் deer feeding என்று பெயர் கொடுத்து மக்களை கவரும் இடமாக மாற்றி இருக்கிறார்கள்.

என்னைப் போல் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு ஆடு மாடுகளுக்கு புல் வைக்கோல் எல்லாம் கொடுத்து பழக்கம் என்பதால் மானுக்கு தீனி கொடுப்பது பெரிதாக தெரியவில்லை. ஆனால் இங்கு மான்களுக்கு தீனி கொடுப்பதை ஒரு பெரிய செயலாக கருதி அதனுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதால் மானுக்கு பிரமுகர் தகுதியும் அதனுடன் இணைந்து போட்டோ எடுப்பதை பெருமையாகவும் கருதுகிறார்கள்.


எந்த அளவுக்கு சிறப்பாக கருதுகிறார்கள் தெரியுமா? காசிக்குப் போனால் விஸ்வநாதரை தரிசிப்பது எவ்வளவு சிறப்போ அதே அளவுக்கு மணிகர்ணிகா காட்டுக்கு செல்வதும் சிறப்புடையது. காசிக்கு சென்று வந்தவர்களை மணிகர்ணிகா காட்டுக்கு சென்றீர்களா என்று கேட்பதைப் போல நாராபார்க் சென்றவர்களை மானுக்கு தீனி போட்டீர்களா என்று கேட்குமளவுக்கு சிறப்பைப் பெற்றுள்ளது.

பின் சற்று தொலைவிலுள்ள டோடைஜி சென்றோம். மிகவும் சிறப்புமிக்க வகையில் பரந்த நிலப்பரப்பில் இருந்த அந்த புத்த கோவில் வியக்க வைத்தது. அங்கேயும் மான் கூட்டங்கள் சுற்றித் திரிந்தன. அந்தமானைப் பாருங்கள் அழகு என்று பாடத்தோன்றும் வகையில் மான்கள் வலம் வந்தன. அந்த புத்தகோவில் பழமை வாய்ந்தது என்பதை தைப் பார்க்கும்போது அதன் தோற்றம் கூறியது.

மாடசாமி அண்ணாச்சியின் ஞாபகம் வரவே கோவிலைப்பற்றி அதிகம் சொல்லி புனித யாத்திரை போன்றதாக ஆக்காமல் மற்ற விபரங்களைப் பற்றிச் சொல்கிறேன். பியூஷிமி இனாரி டெய்ஷாவைப் பற்றியே அதிகமாக சொல்லிவிட்டேன் அல்லவா? மதுரையைப் பற்றிச் சொல்லும்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றிச் சொன்னாலே போதும். கல்லழகர் கோவில், பழமுதிர்ச்சோலை என்று சொல்லிக் கொண்டேபோகத் தேவையில்லை என்பது அவர் கருத்து.

கட்டுரையைப் படிக்கும் அவரது விமர்சனமாக எடுத்துக் கொள்வோம். ஆதலால் அங்கு பெரிய புத்தரின் சிலை ஒன்று உள்ளது என்பதை மட்டும் சொல்லுவிட்டு வேறுபக்கம் பார்வையை மாற்றுகிறேன். இந்த கோவிலில் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்க முகங்களைக் கொண்ட அசோக ஸ்தூபியை அங்கு வைத்திருந்தார்கள். 

இலங்கை அரசின் கொடியில் இருக்கும் சிங்கத்தையும் நினைவூட்டுகிறது. இந்திய அரசு சின்னத்தில் இருக்கும் சிங்கத்துக்கும் இலங்கை அரசின் தேசியக் கொடியில் இருக்கும் சிங்கத்துக்கும் ஏதோ தொடர்புள்ளது? புத்த மதம் இந்தியாவில் இருந்து அங்கு சென்றுள்ளது என்ற தொடர்பா? முதலில் இந்த ஸ்தூபியை ஜப்பானிலுள்ள டோடைஜி டெய்ஷாவில் வைத்திருப்பதன் தொடர்பைப் பார்ப்போம்.

அதற்கு சான்றாக கல்வெட்டும் அதனடியில் அறிவிப்பும் ஜப்பானிய மொழியிலும் மற்றும் ஆங்கிலத்திலும் தொடர்பின் விளக்கத்தைக் கூறுகிறது. கோவில் என்றால் கோபரம்  இருக்கும். இங்கும் வெங்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் போன்று ஒன்றுஉள்ளது. இதற்கு பின் ஒரு வரலாறும் உள்ளது. 

-சங்கர சுப்பிரமணியன்.

(தொடரும்)

No comments: