சிவத்திரு தங்கம்மா அப்பாக்குட்டி
(7தை 1925 – 15 ஆனி 2008)
பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்
அஞ்சாத நெஞ்சுடனே வீராங் கனையாய்
அற்புதநற் சிந்தனையைச் செயலில் வடித்து
நம்;சாதி யினரில்நலி வுற்றோர்க் காக
நனிசிறந்து செயலாற்ற நாளும் பொழுதும்
துஞ்சாது உழைத்துயர்ந்த செஞ்சொல் அரசீ!
துரந்தரியே உன்பணியை உனது தொண்டன்
விஞ்சுபுகழ் ஆறுதிரு முருகனெ னுமந்தணன்
வெகுசிறப்பாய் ஆற்றுகிறான் வெற்றி உனதே!
எண்ணத்தைச் சீராக்கி ஈர உணர்வை
எல்லோர்நெஞ் சங்களிலும் ஊற்றாய் நிறைத்தாய்
கண்ணுகுக்கும் நீர்துடைத்து வாழும் பலரும்
கசிந்துருகி உனைநினைந்து தொழுவர் அன்றோ?
பண்புடையோய் பணிகள்பல கனவாய்க் கண்டாய்!
பார்வியக்க நனவாக்கி நிறைவு கொண்டாய்
விண்ணிலுமுன் திருப்பணிகள் தொடரத் தானோ
விருப்புடனே பூத்தேரில் விரைந்து சென்றாய்!
அம்மனின் திருத்தளிக்கு ராஜகோ புரத்தொடு
அழகியசித் திரத்தேரும் அணியாக் கினாயே!
செம்மையாய்க் கல்யாண மண்டபம் மட்டுமா?
தினம்பசித்தோர் உண்டுமகிழச் சீருஞ் செய்தாய்!
எம்மாதவ மீழச்சைவர் இயற்றி னாரோ?
இணையிலா மகளிரில்லம் அமைத்த தாயே!
கைம்மாறாய் உனைநினைந்து கரங்கள் கூப்பி
காதலொடு காலமெலாம்; போற்று வோமே!
வாழ்க்கைதனை முழுமையாய் அர்ப்ப ணித்து
வல்வினையால் வாழ்விழந்த அபலைகள் வாழத்
தோள்கொடுத்து அரவணைத்துத் துயரைத் தீர்க்க
தூயவில்லம் தோற்றுவித்தாய்! துர்க்கை அம்மன்
தாள்வணங்கத் திருத்தளியை அமைத்த தேவீ
தணியாத வேட்கையொடு ஆற்றும் பணிக்கு
ஏழ்பிறப்பும் வாழ்த்திநல் லாசி அருள்வாள்
என்றென்றும் தேசுமங்காத் தங்கம் மாவே!
குணம்படைத்தோர் நற்செயல்கள் ஆற்றி நிற்கக்
கொற்றவையே உன்வாழ்க்கை பாடஞ் செப்பும்!
பணம்படைத்தோர் மனிதநேயம் கொண்டு சேவை
பலசெய்ய உன்தியாகம் உந்து சக்தி!
எணமுடைத்தோய் எம்மீசன் மலர்ப் பாதம்
இணைந்திருந்து நல்லாசி அருள்வாய் தாயே!
கணமேனும் மறவோம்நாம் காலங் காலம்
கண்ணிமைபோல் உன்னினைவைக் காத்து வாழ்வோம்!
வில்தொடுத்து நாணேற்றும் அர்ச்சுனன் போலே
விலைமதிக்க முடியாத விருந்தாய் அமையச்
சொல்தொடுத்து உரைநிகழ்த்திப் பலரைக் கவர்ந்தாய்
சுடர்விளக்காய் நெஞ்சங்கள் பலதில் ஒளியை
வல்தொடுத்து ஏற்றிவைத்தாய்! தோன்றாத் துணையாய்
வழிநடத்தி வாழ்வழித்து உயர வைத்தாய்!
ஒல்தொடுத்து நான்பாடும் கவிதை எல்லாம்
உன்றன்செவிக் கெட்டிடுமோ ஏற்பீர் அம்மா!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரும்பத விளக்கம்
நேரிழை - மாது
துரந்தரி – பொறுப்பு மிக்கவள்
விஞ்சுபுகழ் - மிகுத்துவரும்புகழ்
கொற்றவை - வெற்றி சிறந்தவள் - (வீரத் திருமகள்)
எணமுடைத்தோய் - மதிப்புடையவள்
ஈர உணர்வு – அன்புணர்வு
நனி சிறந்து– மிகுந்து சிறப்படைய
வல்வினை –கொடிய வினைப்பயன்
வேட்கை – பற்றுள்ளம்
தேசு – புகழ்
தோன்றாத் துணையாய் - கடவுளைப் போல்
(ஒன்றாய் உடனாய் வேறாய்த் தோற்றாவண்ணம்)
வல்தொடுத்து - திறமைகூட்டி
ஒல்தொடுத்து - இசைவுகூட்டி
திருத்தளி – பெருமைமிகு கோயில்



No comments:
Post a Comment