இலங்கைச் செய்திகள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

மதவாச்சி முதல் தலைமன்னார் வரை ரயில் சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை இன்று ஆரம்பம்

வவுனியாவில் 36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

திருகோணமலையில் 36வது தியாகிகள் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

கல்முனை படுகொலையின் நினைவு நாள்: 1990 ஜூன் 20 தியாகங்கள் நினைவு கூரல்! 



தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை 

20 Jun, 2026 | 01:08 PM

சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டது. 

கடந்த வியாழக்கிழமை (18) நடத்தப்பட்ட விசாரணையின்போது எழுத்தாளரின் தரப்புச் சார்பாக சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர். 

இதேவேளை, எதிர்த்தரப்புவாதிகளாக முறைப்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சு, கலாசார அமைச்சு மற்றும் சுங்கப்பிரிவு சார்பில் சட்டத்தரணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தமிழ் மக்கள் சார்ந்த நினைவுகளையும் கதைகளையும் எழுதுகின்ற உரிமை தமக்கு உள்ளமையை விசாரணையின்போது சுட்டிக்காட்டியதாகவும் இந்த விடயத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தீபச்செல்வன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 







மதவாச்சி முதல் தலைமன்னார் வரை ரயில் சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை  

19 Jun, 2026 | 07:04 PM

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவையின் பரீட்சார்த்த செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) பகல் நடைபெற்றன.

தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டதையடுத்து, தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) பகல்
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விரைவில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 




கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை இன்று ஆரம்பம்  

19 Jun, 2026 | 05:34 PM

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முதலாகவும், தற்போது இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் கிளிநொச்சியில் மாத்திரமும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிகிச்சையினை இன்று (19) ஆரம்பித்துள்ளனர்.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில்  அமைக்கப்பட்ட வடக்கு மாகாண விசேட பெண்நோயியல் மருத்துவமனையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடமும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையும் இணைந்து கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பங்களிப்புடன் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையினை (IVF) இன்று ஆரம்பித்துள்ளனர்.

திருமணத்தின் பின்னர் குழந்தைகள் இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இன்றைய சூழலில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை (IVF) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு முதற்கட்டமாக இச்சிகிச்சை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உடல், உள ரீதியான பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்ட தகுதியான பெண்கள் தெரிவு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக இச்சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச வைத்தியசாலைகளில், குறிப்பாக, தற்போது கிளிநொச்சி மாவட்ட அரச வைத்தியசாலையில் மட்டுமே செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை (IVF) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர்,  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி 





வவுனியாவில் 36வது தியாகிகள் தின நினைவேந்தல்! 

19 Jun, 2026 | 01:29 PM

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை அனுஷ்டிக்கப்பட்டது. 

இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  அவர்தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா,இ.இந்திரராஜா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


































நன்றி வீரகேசரி 






திருகோணமலையில் 36வது தியாகிகள் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! 

19 Jun, 2026 | 01:00 PM

36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று (19) வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய தியாகிகள் தின நிகழ்வு திருகோணமலையில் உள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் வை. விக்கினேஸ்வரன் (கிருபா), ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தீபம் ஏற்றப்பட்டு, உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.












































நன்றி வீரகேசரி 






கல்முனை படுகொலையின் நினைவு நாள்: 1990 ஜூன் 20 தியாகங்கள் நினைவு கூரல்! 

21 Jun, 2026 | 11:37 AM

இலங்கையின் கிழக்கு மாகாணம்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி  சந்தியில் சனிக்கிழமை (20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதன் போது  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வாழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு  கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் முதலில் விளக்கேற்றல் நடைபெற்றதுடன்


தொடர்ந்து 1 நிமிட மௌன அஞ்சலி இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்  சம்பவ நாட்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எதிர்கால சந்ததிகள் நலன் கருதி தத்தமது உரைகளில் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஜூன் மாதம் 11 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் 600 க்கும் அதிகமான பொலிஸாரைப் படுகொலை செய்ததை அடுத்து  கல்முனை நகர் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதன் காரணமாக  விடுதலைப் புலிகள் கல்முனை நகரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து பொதுமக்கள் மீதான  தாக்குதல் 1990 ஜூன் மாதம் 20  இல் ஆரம்பமானது.

இதன் போது  கல்முனை வாடி வீட்டு சந்தியில் நிலைகொண்டு ராணுவம், துணை இராணுவ குழுக்கள் இணைந்து  தமிழ்ப் பொதுமக்களைக் கடத்தினர் என்றும்  பின்னர் அவர்கள் அனைவரையும்  அங்குள்ள  கடைகளுக்குப் பின்னால் வைத்து எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இறந்தவர்களின் எண்ணிக்கை  சுமார்   250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன்  1990 ஜூன் மாதம் 27 இல்  75 பொதுமக்கள்  இராணுவத்தினரால்  சுற்றி வளைக்கப்பட்டு  பின்னர் கொல்லப்பட்டு  எரியூட்டப்பட்டனர்.

மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. மேலும் மொத்தமாக 7,000 பேர் வரை 1990 ஜூன் மாதத்தில் கொல்லப்பட்டனர் என அவ்வமைப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.















































நன்றி வீரகேசரி 



No comments: