இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம்.
பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன.
ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.
எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.
ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்!
மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.
கர்ப்பிணிப்பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவ்வாறு அவதியுற்ற காலத்தில் அங்கு பிறந்த நடேசனின் கனவு, அவர் கடல் கடந்து அவுஸ்திரேலியா வந்ததன் பின்னர்தான் நனவாகியது. அதற்கான வழித்தடத்தை வழங்கிய கங்காரு தேசத்திற்கு நன்றி விசுவாசமாக வாழ்ந்தவாறு, இங்கும் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தவாறு இலக்கியவாதியாகியிருக்கும் நடேசன்
அண்மையில் தமிழ்நாட்டில் தனது நாவலுக்காக
கரிகாற்சோழன் விருதையும் பெற்றிருக்கிறார்.
எழுவைதீவு மக்களுக்காக ஒரு மருத்துவ
மனையையும் சில வருடங்களுக்கு முன்னரே அமைத்துக் கொடுத்துள்ளார்.
எழுவைதீவில் தனது ஆரம்பக்கல்வியை
முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மேலும் தொடர்ந்த நடேசன், உயர்தர வகுப்பில் தேர்ச்சிபெற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவ பீடத்தில் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார்.
இலட்சிய நோக்கத்துடன் வாழும் ஒவ்வொருவரது வாழ்விலும் மூன்று அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் இரண்டறக்கலந்துவிடும்.
அவை:- கனவு ( Dream) போராட்டம் ( Struggle) வெற்றி ( Success) நடேசனின் வாழ்வை கூர்ந்து நோக்கும்பொழுது இந்த அம்சங்கள் தவிர்க்கமுடியாதவையாக இருந்துள்ளன.
ஒரு நோக்கத்தை கனவுகாண்பது. அதனை நனவாக்க கடுமையாக உழைப்பது. இறுதியில் வெற்றிபெறுவது.
முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான பாரதரத்னா அப்துல்கலாம், இளையசமுதாயத்தைப்பார்த்து அடிக்கடி உதிர்த்த வார்த்தையே “ கனவு காணுங்கள் “ என்பதுதான்.

.jpg)
















