அன்று 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் ஓர் நாள். எனக்கு அப்போது தான் திருமணமாகி இரண்டு மாதங்கள் பூர்த்தி ஆகியிருந்தது. நானும் என் கணவரும் சாம்பியா நாட்டிலுள்ள இண்டோலா (Ndola) என்ற சிறிய நகரில் குடியிருந்தோம் .
எங்களுடன் என் மாமனார், மாமியார், மற்றும் என் கணவரின் இரு தங்கைகளும் தங்கியிருந்தார்கள் . எங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் போல விளங்கியது. எங்கள் வீட்டில் இரண்டு சாம்பிய பணிப்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தாலோ அவர்கள் சட்டென வேலையிலிருந்து நின்று விட்டார்கள்.
எனவே எங்கள் வீட்டு செக்யூரிட்டி கார்ட் (security guard) ஒரு புதிய பணிப்பெண்ணை கூட்டி வந்தான். சாம்பிய மக்கள் தங்கள் தாய் மொழியுடன் ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடுவார்கள்.
புதிதாக வந்தவளுக்கு சுமார் முப்பது வயது மதிப்பிடலாம் போலிருந்தது . கன்னங் கறுப்பு நிறம் . சாந்தமான முகத் தோற்றத்தை கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும்போது அவளது பற்கள் காரிருளில் மின்னல் பளிச்சிடுவது போல பளிச்சிட்டன. அவள் பெயர் மாத்தா (Martha) என அறிந்து கொண்டோம்.
அவளும் காரியத்தில் கெட்டிக்காரி தான். தான் எந்த மாதிரி வீட்டில் வேலை செய்ய போகிறோம், என்ன வேலை செய்ய போகிறோம், எங்கு தங்க போகிறோம், எவ்வளவு சம்பளம் என எல்லாவற்றையும் அறியத்தான் அன்று வந்திருந்தாள்.
சுருங்கக்கூறினால் நாங்கள் அவளை இன்டெர்வியு பண்ணினோம். பதிலுக்கு அவளும் எங்களை இன்டெர்வியு பண்ணினாள். அவள் எங்களை இன்டெர்வியு பண்ணும்போதே தனது ஒரேயொரு மகனான முலேங்காவையும் (Mulenga) தன்னுடன் கூட்டி வந்து சேர்வன்ட் குவார்ட்டேர்ஸில் வைத்திருக்க அனுமதி கேட்டாள். நாங்களும் அதற்கு சம்மதித்தோம்.
முலேங்காவிற்கு 10 வயதாகிறது. ஆனால் இரண்டாம் வகுப்பில் தான் படித்துக் கொண்டிருந்தான். மார்த்தாவுக்கு வசதியில்லாதபடியால் பாடசாலையில் மூலேங்காவை உடனடியாக சேர்த்திருக்கவில்லை.
அவள் கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள் எனக் கூறினாள்.எங்களுக்கு அது ஒரு விதத்தில் நிம்மதி அளித்தது என்றே கூறலாம். அங்கு ஒரு வீட்டின் முதலாளியை சாம்பிய வேலைக்காரன் வெட்டி கொன்ற செய்தியையும் கேள்விப்பட்டிருந்தோம்.
எனவே மார்த்தாவும் மகனும் மட்டும் வந்து எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள சேர்வன்ட் குவார்டேர்ஸில் தங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்கவில்லை.