மேஜர் சந்திரகாந்த் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1954ம் ஆண்டு வீணை எஸ். பாலசந்தரின் இயக்கத்தில் அந்த நாள்


என்ற பாடல்கள் இல்லாத படத்தைத் தயாரித்த ஏவி .எம் , பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஒரே ஒரு பெண் பாத்திரம் தோன்றும் படமொன்றை கே. பாலசந்தர் இயக்கத்தில் தயாரித்தார். அந்தப் படம்தான் மேஜர் சந்திரகாந்த். அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படம் பெரிய பட நிறுவனம் தயாரித்த சிறிய பஜெட் படம் என்ற பேரையும் பெற்றுக் கொண்டது. 



ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களிடம் சிறந்த குணச்சித்திர நடிப்பும் புதைந்து கிடக்கும் என்ற உண்மையை முதலில் வெளிப்படுத்தியவர் ஜே .பி . சந்திரபாபு. இவர் நடித்த குமாரராஜா, கவலை இல்லாத மனிதன் போன்ற படங்களில் தனது சோக நடிப்பை வழங்கியிருந்தார் சந்திரபாபு. அவரை தொடர்ந்து சோக நடிப்பை தன்னால் தர முடியும் என்பதை நாகேஷ் செய்து காட்டினார். அதற்கு வழியமைத்து கொடுத்தவர் கே. பாலசந்தர். இவர் மேடையேற்றிய சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த் போன்ற நாடகங்களில் நடித்து உணர்ச்சிகரமாக நடித்து தன் சோக நடிப்பை வெளிக் காட்டினார் நாகேஷ். இந்த நாடகங்கள் படமான போது திரையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் இவர். 


ஒரு தையல்காரன், அவனுக்கு ஒரே ஒரு தங்கை , அவளொரு கல்லூரி

மாணவி , அவளுக்கு ஒரு பித்தலாட்டக்கார காதலன், அவளின் பெண்மையை பறித்து விட்டு அவன் ஒதுங்கி விட, அவள் விபரீத முடிவை எடுக்கிறாள். உண்மையை தெரிந்து கொள்ளும் அண்ணண் தன்னுடைய தங்கையை ஏமாற்றி கை விட்டவனை பழி வாங்குகிறான். அதன் பின் போலீசில் இருந்து தப்ப தான் கொன்றவனின் தந்தையின் வீட்டிலேயே அடைக்கலமாகிறான். சட்டத்துக்கும் தர்மத்துக்கும் இடையில் அவன் உயிர் ஊசலாடுகின்றது .

 

இந்த கதையை நாடகமாக்கிய பாலசந்தர் சுந்தரராஜானை மேஜர் சந்திரகாந்தாக நடிக்க வைத்தார். தையல்காரன் மோகன் வேடத்தில் நாகேஷை நடிக்க வைத்தார். நாடகம் படமான போது இருவரும் அதே வேடத்தை ஏற்றார்கள். ஆனால் ஒருவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாடகத்தில் மேஜரின் மகனாக பித்தலாட்டக்காரனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். ஆனால் படத்தில் அந்த வேடத்தில் நடித்தவர் ஏவி .எம் .ராஜன். மற்றுமோர் மகனாக பொலிஸ் இன்ஸ்பெக்டராக முத்துராமன் நடித்தார். இவர்களுடன் தசரதன் , ஐ.எஸ் .ஆர், டைபிஸ்ட் கோபு, ஆகியோரும் நடித்தனர். 

 அன்பே வா படத்தைத் தொடர்ந்து எம் ஜி ஆர் நடிப்பில் இன்னுமொரு படத்தை தயாரிக்க ஏவி .எம் நிறுவனம் திட்டமிட்டு அதில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவிடம் தேதிகளை வங்கியிருந்தார்கள். ஆனால் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் போகவே , ஜெயலலிதாவிடம் வாங்கிய கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் ஏவி. எம் . நிறுவனத்தினர். அந்த வகையில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்தார் ஜெயலலிதா. ஆனாலும் அவரின் நடிப்பு மனதில் நிற்பது போல் அமைந்தது. பாலசந்தர் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படமும் இதுதான். 

 மேடை நாடகத்தில் பல முறை நடித்த காரணத்தால் படத்திலும்

சுந்தரராஜன், நாகேஷ் இருவரும் நடிப்பில் தங்கள் திறமையை காட்டியிருந்தார்கள். ஏற்கனவே சில படங்களில் அப்பா வேடத்தில் நடித்த போதும் இந்த படத்தில் இராணுவ மேஜராக வந்து, இரு கண்களையும் இழந்த நிலையிலும் கம்பீரமும் , கண்டிப்பும் காட்டும் தந்தையாக நடித்து முத்திரை பதித்திருந்தார் சுந்தரராஜன். இந்த படத்தில் நடித்ததனால் அவரின் பெயரோடு மேஜர் என்ற பட்டமும் ஒட்டிக் கொண்டது. முத்துராமன் கொடுத்த வேடத்தை நிறைவாக செய்திருந்தார். ஏவி. எம் . ராஜன் காதல் மன்னனாக வந்து டூயட் படி, இடையிலேயே மறைந்து விடுகிறார். இந்த படத்தில் அவரின் பேர் ரஜினிகாந்த். பத்தாண்டுகள் கழித்து சிவாஜி ராவ் வாய்ப்பு தேடி பாலசந்தரிடம் வந்த போது அவருக்கு

பாலசந்தர் சூட்டிய பேர் ரஜினிகாந்த! 



படத்தின் ஹீரோ நாகேஷ். முதல் பாதியில் சிரிக்க வைப்பவர், படத்தின் மறு பத்தியில் உருகவும், கலங்கவும், வைக்கிறார். பாலசந்தரின் கை வண்ணத்தில் எல்லோர் நடிப்பும் நேர்த்தியாக அமைந்தது. 


வாலியின் பாடல்களுக்கு வி. குமார் இசையமைத்தார். கல்யாண சாப்பாடு போடவா, நேற்று நீ சின்ன பாப்பா, ஒரு நாள் யாரோ பாடல்கள் ரசிகர்களை சென்று சேர்ந்தன. படத்தின் கமெராமான் எஸ். மாருதிராவ் . அன்னாரின் அனுபவம் பேசியது. 



ஏவி. எம் தயாரித்த சர்வர் சுந்தரம் படத்துக்கு கதை வசனம் எழுதி, அவர்கள் எடுத்த மேஜர் சந்திரகாந்த் படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கியதன் மூலம் பாலசந்தர் இயக்குனராக தமிழ் திரையில் ஓர் நிரந்தர இடத்தை பெற்றுக் கொண்டார். ஆனாலும் இந்தப் படத்துக்கு பிறகு பாலசந்தரும், ஏவி. எம்மும் மீண்டும் இணையவே இல்லை. ஆனாலும் பாலசந்தரின் ஒரு ரசிகராகவே ஏவி எம் இறுதி வரை திகழ்ந்தார்
.



No comments: