யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் - ட்ரம்ப் தகவல்
இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம் : டிரம்ப் அறிவிப்பு
“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது தொடக்கம் மட்டுமே” : மத்திய கிழக்கு பதற்றத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிலைப்பாடு
போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா இடையே 2 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை
ஈரானுக்கு இராணுவ உதவி? – சீனா திட்டவட்ட மறுப்பு, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் - ட்ரம்ப் தகவல்
17 Apr, 2026 | 11:15 AM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிய யுரேனியத்தை "அணுசக்தி தூசி" (nuclear dust) என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கை உலுக்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஓர் அமைதி உடன்படிக்கையை நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நிரந்தரமாக அணு ஆயுதம் தயாரிப்பதைக் கைவிடவேண்டும் என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், ஈரான் உடன்படிக்கைக்கு வர மறுத்தால், அதன் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகை தொடரும் என்றும், உள்கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளது. உடன்படிக்கையில் கையெழுத்திட தான் பாகிஸ்தான் செல்லவும் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் வியாழக்கிழமை (16) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்திருந்த ட்ரம்ப், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் இரு நாட்டுத் தலைவர்களும் சமாதான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு வரவுள்ளார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தாங்களும் போர் நிறுத்தத்தை மதிப்போம் என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம் : டிரம்ப் அறிவிப்பு
17 Apr, 2026 | 09:40 AM
( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்ற நிலைக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையில் 10 நாள் காலப்பகுதிக்கான போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், அந்த பகுதியில் பதற்றம் குறைந்தது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பு, லெபனான் வழியாக இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுத்து வந்தது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் லெபனானை தாக்கியதில், பல பொதுமக்கள் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், போர்நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என லெபனான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோசப் அவுன் ( Joseph Aoun ) மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu ) ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பயனளித்ததாக தெரிவித்துள்ளார்.
“பெரிய அளவில் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்கான முக்கிய கட்டமாக, இரு தலைவர்களும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இணங்கியுள்ளனர். தீவிர ராஜதந்திர முயற்சிகளின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் படி, 10 நாட்கள் போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 34 ஆண்டுகளில் முதன்முறையாக இரு நாடுகளின் தலைவர்களும் வொஷிங்டன் டி. சி. யில் நேரடியாக சந்தித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க படைகளின் தலைமை தளபதி டேன் கெயின் ஆகியோர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
உலகளவில் பல மோதல்களை நிறுத்தியதாகவும், “இது 10 ஆவது போர் நிறுத்த முயற்சியாகும்; இதையும் நாம் சாதிப்போம்” எனவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது தொடக்கம் மட்டுமே” : மத்திய கிழக்கு பதற்றத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிலைப்பாடு
16 Apr, 2026 | 04:25 PM
( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளது. “போர்நிறுத்தம் என்பது முடிவு அல்ல – அது ஒரு தொடக்கம் மட்டுமே” என ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் மாநில அமைச்சர் நூரா பின்த் முகமது அல் காபி (Noura bint Mohammed Al Kaabi) தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேரலை நிகழ்ச்சியொன்றி மேற்கண்டவாறு தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் நூரா பின்த் முகமது அல் காபி மேலும் கூறுகையில்,
ஈரான் போரின் பின்னணியில், சுமார் 6 வாரங்களுக்கு பிறகு உருவான போர்நிறுத்த சூழ்நிலையிலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தன்னுடைய முக்கிய கவனத்தை தூதரக முயற்சிகள் மற்றும் பதற்றக் குறைப்பில் செலுத்தி வருகிறது.
கடந்த 40 நாட்களுக்கு மேலாக, 3,000க்கும் அதிகமான ஏவுகணைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலக்காகக் கொண்டதாகவும், இருந்தபோதிலும் நாடு இன்னும் திடத்தன்மை மற்றும் வலிமை கொண்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இது நிலப்பரப்பைப் பற்றியது மட்டுமல்ல. ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இந்தப் போரில் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்தபோதும் தாக்குதல்களுக்கு உள்ளானது. இது ஒரு கருத்தை தாக்கும் முயற்சியாகும்,” என்றார்.
ஹோர்மூஸ் நீரிணை எந்த ஒரு நாட்டினாலும் கட்டுப்படுத்தப்பட முடியாது என்றும், அது உலகளாவிய வர்த்தகம், ஆற்றல், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான முக்கிய பாதை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் நிலைப்பாடு தெளிவானது பொறுப்புணர்வு, நிலைத்தன்மை மற்றும் உலக பொருளாதார அமைப்புகளை பாதுகாப்பது,” என தெரிவித்தார்.
நாட்டின் நிலப்பரப்பு மற்றும் மக்களை பாதுகாப்பது முதன்மை என கூறிய அவர், எதிர்காலத்தில் மாற்று வர்த்தக பாதைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
“இது ஒரு சோதனை நேரம். ஒரு நாடு இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி பதிலளிக்கிறது என்பதே அதன் அடையாளமாகும்,” என்றார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வலுவான உறவுகளை பேணிவருகிறது. செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் கூட்டாண்மை தொடர்கின்ற நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சீனாவுடனும் உறவுகள் விரிவடைகின்றன.
எதிர்காலத்தில், இந்த உறவுகள் மேலும் தெளிவான தளத்தில் தொடரும் என்றும், பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக் காலத்திலிருந்து வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்த ஐக்கிய அரபு இராஜ்ஜியம், தற்போதைய நெருக்கடியிலும் அதையே தொடர்கிறது. தலைமையின் நேரடி தொடர்பு, தெளிவான தகவல் பரிமாற்றம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்த நெருக்கடியின்போது கூட மக்கள் நாட்டை விட்டு செல்லாமல் தொடர்ந்து வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளனர். இது நாட்டின் அமைப்பின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும்.
“ஐக்கிய அரபு இராஜ்ஜயம் என்பது மக்கள் சார்ந்த நாடு. இங்கு வாழும் அனைவரும் எமிராத்தியர்களே,” என்ற கருத்து, இந்த நெருக்கடியின் போது வெளிப்பட்ட ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் தூதரகம், பாதுகாப்பு மற்றும் நீண்டகால அமைதி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது. நன்றி வீரகேசரி
போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா இடையே 2 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை
16 Apr, 2026 | 09:47 AM
( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னணியில், இரு நாடுகளும் அதனை மேலும் நீட்டிக்கும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத் நகரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான விவகாரங்களில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இதன் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தார். அதேசமயம், ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில், இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன. இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்திலேயே நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் அமெரிக்கா இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது, ஹோர்மூஸ் நீரிணையை எந்தத் தடையும் இன்றி முழுமையாகத் திறக்க வேண்டும் மற்றையது அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, ஈரான் தூதுக் குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
மேலும், குறிப்பாக ஈரானின் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படையின் முழு அதிகாரத்துடன் அந்தத் தூதுக்குழு செயல்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டுவதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், தற்போது அமுலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பை ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் பரிசீலித்து வருகின்றன.
இன்றைய பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பதற்ற நிலையை குறைக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
ஈரானுக்கு இராணுவ உதவி? – சீனா திட்டவட்ட மறுப்பு, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
15 Apr, 2026 | 04:37 PM
( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
ஈரான் தொடர்பான மத்திய கிழக்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீன அரசு முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியன இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல்களுக்கு பின்னர், ஒரு மாத கால பதற்றத்துக்குப் பின் தற்போது இரண்டு வார தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு சீனா இராணுவ உதவி வழங்குவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் புதிய சர்ச்சை உருவானது.
ஆனால், இந்த தகவல்களை சீன அரசு முழுமையாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தனது சமூக வலைதளமான எக்ஸில் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கு சீனா இராணுவ உதவி வழங்குகிறது என்ற செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் சித்தரிக்கப்பட்டவை” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ஏற்கனவே பதற்றமான மத்திய கிழக்கு சூழ்நிலையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார மோதல்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment