இலங்கைச் செய்திகள்

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இராணுவ புலனாய்வு பிரிவு மீது விசாரணை கோருகிறார் சிரன்த அரசிங்க!

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் வருகை!

யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும்  நூல் வெளியீடு ; இதுவரை பயன்படுத்தப்படாத வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பதாக பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தெரிவிப்பு



அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

17 Apr, 2026 | 01:58 PM

(இணையத்தள செய்தி பிரிவு) 

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக,  மே மாதம் 15ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர், சிரேஸ்டநில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், காணி நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 



பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

17 Apr, 2026 | 11:33 AM

( இணையத்தள செய்திப் பிரிவு )

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை முதல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியின் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







































நன்றி வீரகேசரி 





உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இராணுவ புலனாய்வு பிரிவு மீது விசாரணை கோருகிறார் சிரன்த அரசிங்க!

16 Apr, 2026 | 10:11 PM

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம். அதேபோன்று மஹசோன் பலகாயவுக்கு பின்னால் சிரேஷ் சலே இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் சிரன்த அரசிங்க தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கூற்றை அடிப்படையாகக்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை நேற்று கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதல் 2017 முதல் படிப்படியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என விசாரணைகளின்போது வெளிவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். சஹ்ரானுக்கு இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள அந்த காலப்பகுதியில் அவருக்கு பின்னால் யாரும் இருக்கவில்லை.  இவ்வாறான நிலையில் 2018  பெப்ரவரி 26ஆம் திகதியில் இருந்து தெல்தெனிய, அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மூலம் முஸ்லிம் விராேத சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்தன. அந்த சம்பவங்கள் சஹ்ரானுக்கு முஸ்லிம் குழுக்களை இணைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

அத்துடன் இந்த அசம்பாவிதங்களுக்கு பின்னால் மஹசோன் பலகாயவே இருந்தது. அந்த மஹசோன் பலகாயவே அண்மையில் திருகோணமலையில் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு  நீதியை தேடிச்செல்லும் அரசாங்கத்தை நிலையற்றதாக்க முயற்சிக்கிறது. இதனை நாங்கள் தெளிவாக கண்டோம். மஹசோன் பலகாய இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் அசம்பாவிதங்களை மேற்கொள்ளும்போது அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

2018ல் இடம்பெற்ற சம்பவத்துக்காக அமித் வீரசிங்கவை கைது செய்தார்கள்.அவரின் உதவியாளர்களே திருகோணமலை சம்பவத்துக்கு பின்னால் இருக்கிறார்கள். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவின் சுரேஷ் சலே உள்ளிட்ட சிலர் தொடர்பு இருப்பதாக தெரிவித்து, இவர்களுக்கு எதிராக நாங்கள் 2021 நவம்பர் 15ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தாேம். அந்த முறைப்பாட்டுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அதேபோன்று  குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரான் குற்றச்செயல் ஒன்றை செய்தபோது, ராணுவத்தில் இருக்கும் மேஜர் ஜனரல் ஒருவர் சஹ்ரானை அழைத்து, அவருத்து எச்சரிக்கை செய்து அனுப்பினார். இதுதொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் எனது முறைப்பாட்டின் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்பது, சஹ்ரான் இராணுவ அதிகாரியா? அல்லது இராணுவ புலனாய்வு அதிகாரியா? என்பதாகும்.

அதேநேரம் அண்மையில் சுரேஷ் சலேக்கு எதிராக சாட்சி கூறுவதற்கு வந்த ஒருவருக்கு ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியிலே நாங்கள் இந்த முறைப்பாட்டை கையளித்து, இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம். அதேபோன்று மஹசோன் பலகாயவுக்கு பின்னால் சிரேஷ் சலே இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. ஏனெனில் திருகோணமலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த குனார குணதிலக்க என்பவர் மஹசோன் பலயாகவைச் சேர்ந்தவர். அவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

அதனால் சலே போன்றவர்கள் இணைந்து மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிலர்  இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை புனர்வாழ்வளித்து, ராணுவ புலனாய்வு பிரிவை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி 





நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் வருகை!

16 Apr, 2026 | 01:43 PM

நுவரெலியா மாநாகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு 14, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நுவரெலியா வசந்தகால கொண்டாத்துக்கு மக்கள் வருகை தந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நுவரெலியாவுக்குச் செல்லும் மக்கள் நுவரெலியா கிரகரி வாவியில் உள்ள படகு சேவைகளின் ஊடாக அவர்களுடைய உல்லாச அனுபவங்களையும் சந்தோஷ உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டதோடு, கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள அழகான, பல வகை மலர்களையும் கண்டு மகிழ்வதைக் காண முடிகிறது.

அத்தோடு சுற்றுலாப் பயணிகள் ஹெலிகொப்டர் மற்றும் சீன விமானத்தின் ஊடாக நுவரெலியா பிரதேசத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தம் இடம்பெற்று வந்தாலும் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்காக  அரசாங்கமும் நுவரெலியா மாநகர சபையும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதற்காக ஜனாதிபதிக்கு சுற்றுலாப்பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இம்மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

















நன்றி வீரகேசரி 






யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும்  நூல் வெளியீடு ; இதுவரை பயன்படுத்தப்படாத வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பதாக பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தெரிவிப்பு

15 Apr, 2026 | 06:05 PM

(நா.தனுஜா)

யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னரான சமூகம் மற்றும் பண்பாட்டை அடையாளம் காணமுடிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் எஸ்.பத்மநாதனின் "Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna 300 BC–AD 500" (கி.மு 300 - கி.பி 500 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பண்டைய நாகரிகம், சமுதாயம் மற்றும் கலாசாரம் குறித்த பார்வை' எனும் ஆய்வு நூலின்  வெளியீட்டு விழா கடந்த வார இறுதியில் (11) கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

பேராசிரியர் பத்மநாதனின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை, குறிப்பாக நாகர்களின் வரலாற்றைப் பற்றி மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் ஆராய்கிறது. தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் ஒப்பீட்டு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் யாழ் மாவட்டத்துக்கே உரிய தனித்துவமான பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்த ஒரு சமூகம் பற்றிய கதையை வாசகர்களுக்குக் கூறுகிறது.  நன்றி வீரகேசரி 







No comments: