சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 6…..சங்கர சுப்பிரமணியன்.

புத்த பிக்குகள் குடும்பத் தொழிலாக ஏற்று கோவில்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் வாழ்க்கையிலும் ஈடுபடலாம் என்ற வழக்கும் நடை முறையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தனிப்பட்ட நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி ஜப்பானில் மத நம்பிக்கையடையோர் 48 சதமும் மத நம்பிக்கையற்றோர் 42 சதமும் ஏனையோர் 10 சதமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக ஜப்பானியர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் மிகவும்

தேர்ந்தெடுக்கப் பட்டதாகவே உள்ளது. அவர்கள் நல்ல வளமான வாழ்வுக்காகவும் தொழில் முன்னேற்றத்திற்காக வேண்டுவதற்காக மட்டுமே கோவிலுக்கு செல்கிறார்கள். மத கோட்பாடுகளும் மதம் சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன.

ஜப்பானில் மட்டும் அல்ல அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மத நம்மிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. உழைப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். மதநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் நாடுகளில் கோவில்களை கார்ப்பரேட் கம்பெனி போலவே நடத்துகிறார்கள். ஒரு நாளில் ஒரு கோவிலில் எவ்வளவு பக்தர்கள் குவிகிறார்கள் என்ற கணக்கையே பெருமையாக காட்டுகிறார்கள்.

அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படும் மக்களைப் பற்றிக் கணக்கு காட்டுவதில் அக்கறை காட்டமாட்டார்கள். எங்கள் நாட்டில் பஞ்சம் பட்டினியில் மக்கள் இல்லை என்பதில் பெருமை இருக்கிறதா? எங்கள் நாட்டில் இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு இத்தனைபேர் வருகிறார்கள் என்பதில் பெருமை உள்ளதா? இது பொய்யல்ல. உண்மைதான். இந்த உண்மையைச் சொன்னால் மாடசாமி அண்ணாச்சிக்கு கோபம் வருகிறது. உண்மை சுடும் என்பதில் உண்மையுள்ளதல்லவா?

இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பயணத்துக்கு வருகிறேன். வாடகை வாகனத்தில் பயணிப்பதற்கும் தொடர்வண்டியில் பணிப்பதற்கும் பயணச்செலவில் பெரிய வேறுபாடு. 200 யென் தொடர்வண்டியில் ஆகும் என்றால் 1000ல் இருந்து 1200 யென் வாடகை வாகனத்தில் ஆகும்.



இது தவிர பயணம் செய்யும் நேரத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து மற்று ரோட் சிக்னலில் நிற்கும் நேரம் என்று தாமதப்படும் நேரத்திற்கு ஏற்ப செலவு கூடும். ஆதலால் பெரும்பாலானவர்கள் செலவு குறைவு என்பதாலும் தொடர்வண்டிக்காக காத்திருக்க வேண்டாம் என்பதாலும் தொடர்வண்டியில் பயணிக்கிறார்கள். ஆனால் தொடர்வண்டி நிலையத்துக்கு ஐந்திலிருந்து பத்து நிமிடம் நடக்கவேண்டும்.

இங்கு நடப்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. இதை எப்படி சொல்கிறேன் என்றால் நடந்து செல்லும்போது கால் வலிக்கிறது உட்காரலாம் என்று பார்த்தால் எங்கேயும் இருக்கைகளை பார்க்க முடியாது. அது மட்டுமா? தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை குப்பையில் போடலாம் என்றால் குப்பைத் தொட்டியைப் பார்ப்பது பாலைவனத்தில் தண்ணீரைத் தேடுவது போல்தான் இருக்கும்.

உங்கள் குப்பைகளை நீங்கள்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதே

சமயம் தெருக்களெல்லாம் அவ்வளவு சுத்தமாக இருக்கும். பொது இடங்களிலோ பல்பொருள் அங்காடிகளிலோ குப்பைத் தொட்டிகளை காண்பதரிது. உணவகங்களில் கூட குப்பைத் தொட்டிகள் இல்லை. சாப்பிட்டுவிட்டு குப்பைகளை அதற்காக பெறும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும்.



ஒசாகா சென்ற மறுநாள் பியூசிமி இனாரி டெய்ஷா என்ற ஷிண்டா மத இயற்கை வழிபாட்டுத் தெய்வமான இனாரியில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றோம். ஓட்டலில் இருந்து நடந்தபடியே ஹொம்மாச்சி தொடர்வண்டி நிலையம் சென்றோம். ஜப்பானிலுள்ள எல்லா தொடர்வண்டிகளிலும் செல்லவேண்டும் என்று நினைத்தேன். அதனால் சுரங்கப்பாதை ரயிலிலில் ஷின்-ஒசாகா தொடர்வண்டி நிலையம் செல்ல முடிவு செய்தேன்.


இனாரி செல்ல ஜின்-ஒசாகா தொடர்வண்டி நிலயத்தில் இருந்து கியோட்டோ செல்லவேண்டும். பின் கியாட்டோவில் இருந்து மற்றொரு லோகல் தொடர்வண்டியில்  இனாரி செல்லவேண்டும்.  ஷின்- ஒசாக தொடர்வண்டி நிலையத்தை அடைந்த எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி இருந்தது. ஏகப்பட்ட வழிகள் இருந்தன. சென்ட்ரல் எக்ஸிட், சௌத் சென்டரல், சௌத் ஈஸ்ட் மற்றும் நார்த் என்று பல வழிகள் இருந்தன.



இது தவிர ஷின்கன்ஷன் தொடர்வண்டிகளும் JR லைன்ஸ் தொடர்வண்டிகளும் செல்லும் வழிகள் தனித்தனியாக இருப்பதால் அந்த வழியை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். அதன் பின் கியோட்டோ செல்லும் தொடர்வண்டி எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் டிக்கெட் மெஜினில் டிக்கெட் எடுக்க வேண்டும்.

சுரங்கப்பாதை ஹொம்மாச்சி தொடர்வண்டி நிலையத்தில் ஷின்

ஒசாகா செல்லும் மிடோசூஜி லைன் தொடர்வண்டியைப் பிடித்து ஷின்-ஒசாகா செல்லும் வரை சமாளிக்க முடிந்த என்னால் ஷின்-ஒசாகா தொடர்வண்டி நிலையத்தில் கியோட்டோ செல்லும் JR லைன்ஸ் தொடர்வண்டியை பிடிப்பதுதான் பெரும்பாடாயிற்று. பொதுவாகவே தொடர்வண்டியைப் பிடிக்க அரைமணியில் இருந்து முக்கால்மணி நேரம் எடுக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்த எனக்கு ஒருமணி நேரத்துக்கும் மேலானது.



ஷின்-ஒசாகாவில் இருந்து JR லைன்ஸ் தொடர்வண்டியில் கொடோமா செல்லும் தொடர்வண்டியில் ஏறி பதினைந்து நிமிட பயணத்துக்குப்பின் கியோட்டா தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். கியோட்டோவில் இருந்து நாரா செல்லும் லோகல் தொடர்வண்டியில் ஏறி நான்கு நிமிடப் பயணத்திற்குப் பின் இனாரி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம்.

என் வாழ்வில் கடந்த முப்பது ஆண்டுகளில் இப்படி மூன்று தொடர்வண்டிகளில் ஏறி இறங்கி சவாலான அனுபவங்களைப் பெற்றதில்லை. முன்கூட்டியே தகவல்களை எல்லாம் சேகரித்து திட்டமிட்டிருந்தும் பாடு பெரும்பாடாயிற்று. இனாரியில் இறங்கியதும் பயணம் இனிமையானது. தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரிலேயே நான்கு நிமிடம் நடக்கும் தூரத்தில் கோவில் இருந்தது.




கோவிலுக்குள் நுழையுமுன்னரே சிறிது தூரத்தில் நெல் மற்றும் வளத்துக்கு சம்பந்தப் பட்ட பெண்தோற்றமுடைய கடவுளான (பாலின வேறுபாடுகளுடனும் இருக்கலாம்) கையில் நெற்கட்டுடன் இருக்கும் இனாரியின் தூதுவர் எங்களை வரவேற்றார்.



அந்த தூதுவர் யாருமல்ல நரிதான். நரியின் சிற்பமே இனாரியின் தூதுவர். இந்த நரி சிற்பம் பிரசாதத்தை வாயில் கவ்வியபடி இருக்கும்.



விவசாயத்தில் நெற்பயிருக்கும் நல்ல அறுவடைக்கும் சம்பந்தமான இனாரியின் தூதுவரான நரியின் சிற்பங்கள் வாயில் சாவியுடனும் கழுத்தில் சிவப்பு துணியுடனும் சில இடங்களில் காணப்படும்.

இப்போது அதன் காரணத்தைப் பார்ப்போம். ஷிண்டோ மதத்தில் விவசாயம், நெல் மற்றும தொழிலுக்கு சம்பந்தமான கடவுள் இனாரி என்றும் இக்கடவுளின் தூதுவர் நரி என்பதையும் அறிவோம். இந்த நரியின் வாயில் இருக்கும் சாவி செல்வமும் உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும் சேமிப்புக்கிடங்கின் சாவி என்பதைக் குறிக்கும் அடையாளமாகும்.

தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன். 

No comments: