இலங்கைச் செய்திகள்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி அநுர

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள் நீதிமன்றில் சமர்ப்பணம்

எயார்பஸ் ஊழல் விவகாரம் : வாக்குமூலம் அளிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!


தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி அநுர

Published By: Digital Desk 3

10 May, 2026 | 04:01 PM

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமடைந்து வரும் சூழலில், எமது எதிர்காலம் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது. இந்திய-இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையின் கீழ், தமிழகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பிராந்திய செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் மகத்தான வெற்றிகள் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 





கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள் நீதிமன்றில் சமர்ப்பணம்

09 May, 2026 | 08:55 PM

(எம்.எப்.எம்.பஸீர்)

சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை சனிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நியமித்த கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐவர் கொண்ட குழு இந்த பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்தது.

கொழும்பு, சட்ட வைத்திய மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தினால் இந்த நடவடிக்கைகள் முற்பகல் முதல் இடம்பெற்றன. அதன்படி, இந்த பிரேத பரிசோதனை அறிக்கை,  திங்கட்கிழமை (11) கோட்டை  நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் மரண விசாரணைகளில் இந்த அறிக்கை நிபுணத்துவ சான்றாக ஆராயப்படவுள்ளது.

இதனிடையே கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடமிருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் இந்திக்க லொக்குஹெட்டியின் கீழ் சிறப்புக் குழுவொன்று இந்த மரணம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேன மீண்டும் கைது செய்வதற்கு கடந்த ஏழாம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், கடந்த எட்டாம் திகதி காலையில் கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள 37ஆம் இலக்கமுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வாவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கபில சந்திரசேனவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





எயார்பஸ் ஊழல் விவகாரம் : வாக்குமூலம் அளிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!

09 May, 2026 | 03:21 PM

எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் இன்று சனிக்கிழமை (9) தங்காலை, கார்டன் இல்லத்தில்  கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானபோதிலும், உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் A-330 ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களையும், A-350 ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாகப் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த கொடுக்கல் வாங்கலில் தனக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 20 மில்லியன் ரூபாயை அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இருப்பினும், இதனை மறுத்துள்ள கபில சந்திரசேனவின் சட்டத்தரணி  ரியன்சி அர்ஸகுலரத்ன, தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த விசாரணைக்காகவே முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 





No comments: