ஆற்றில் நீந்துபவன் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்

 ஆற்றில் நீந்துபவன் நேராகவும் வேகமாகவும் முன்னேற வேண்டும் என்றால், முன்புறத்தில் இருக்கும் தண்ணீரை இருபுறமும் தள்ள வேண்டும்; மேலும் தண்ணீரை பின்னால் உதைக்கவும் வேண்டும். தண்ணீரை பின்னோக்கித் தள்ளும் அந்தச் செயல்வே அவனை முன்னே கொண்டு செல்கிறது.

அதுபோலவே, வாழ்க்கையிலும் சிலவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை விடுத்து, துறந்து, பின்செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்தான் மனிதன் சிறிதளவாவது முன்னேற்றம் அடைய முடியும்.

ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அவன் சேகரிக்கிறான், குவிக்கிறான், பிடித்துக் கொள்கிறான்; அவன் வைத்திருப்பதில் பெருமை கொள்கிறான். துறவின் உயர்ந்த மனிதப்பண்பை உணராமல், பொருளாசை, வெற்றி, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றில் மூழ்கிக் கிடக்கிறான். ஆசைகளின் அலைகளைத் தாண்டி நீந்துவதற்குப் பதிலாக, அவற்றுக்குள் சிக்கிக் கொள்கிறான்.

ஆகையால், நாம் முன்னேற்றத்தின் வழிகளைத் தேடி அறிந்து கொள்ள வேண்டும். “இவ்வுலக அறிவில் மூழ்கிய மனிதன் ஆத்மாவை எவ்வாறு உணர முடியும்?” என்று கேள்வி எழலாம். ஆனால் அதற்காக மனம் உடைய வேண்டியதில்லை; நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணவும் கூடாது.

சிறிய மனிதர்கள் பெரிய முடிவுகளை எடுக்கும் போது, மகான்களின் ஊக்கமும் அருளும் அவர்களுக்கு கிடைக்கும். கடலுக்கு மேல் பாலம் கட்டும் பணியில் தன்னாலும் இயன்ற அளவு உதவ வேண்டும் என்று சிறிய அணில் முடிவு செய்தபோது, அது ஸ்ரீ ராமரின் அருளைப் பெறவில்லையா?

தன்னுடைய உதவி மிகச் சிறியது என்பதை அந்த அணில் அறிந்திருந்தது. ஆனாலும், அதனைத் தூண்டியது அர்ப்பணிப்பு உணர்வே. அந்தத் தன்னலமற்ற பக்தியே இறைவனின் அருளைப் பெற்றுத் தந்தது.

No comments: