உலகச் செய்திகள்

வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் - 12 பேர் பலி    



வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

02 Jul, 2026 | 10:18 AM

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியின் பேரழிவு ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின்படி, இதுவரை 11,267 பேர் காயமடைந்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள் இடம்பெயர்வு மற்றும் பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலை ஆகியவை நாட்டின் தற்போதைய தற்காலிக அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜூன் 24ஆம் திகதி, வட-மத்திய வெனிசுவேலாவில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவிலான இரு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி அனர்த்தங்கள் அடுத்தடுத்து தாக்கின.

முதன்மை பூமியதிர்வுக்குப் பிறகு இதுவரை 782 பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன. தற்போது அவற்றின் தீவிரமும் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து, 26,000-க்கும் அதிகமான வெனிசுவேலா இராணுவம், பொலிஸார், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் 17,800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.   நன்றி வீரகேசரி 




காசாவில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு   

30 Jun, 2026 | 10:47 AM

காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை (29) நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 20 பேர் படுகாயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

காசாவின் கான் யூனிஸ், மத்திய காசா, தெற்கு காசா ஆகிய பகுதிகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

2023ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பணயக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். 

அதனையடுத்து, ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் காசாவில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. 

அதன் பின்னர், இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும், காசாவில் செயற்பட்டு வரும் ஹமாஸ் குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.   நன்றி வீரகேசரி 





உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் - 12 பேர் பலி    

30 Jun, 2026 | 01:11 PM

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் சிக்கி சுமார் 40 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. 

இன்று (30ஆம் திகதி) 1,587வது நாளாக நீடித்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் முதலான உதவிகளை வழங்கி வருகின்றன. 

இந்த இரு நாட்டு போரையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்திலேயே நேற்று ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.    நன்றி வீரகேசரி 



No comments: