பெற்றால்தான் பிள்ளையா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


சில சமயம் படத்தில் நிகழும் சம்பவங்களை விட படம் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பையும், திருப்பங்களையும் ஏற்படுத்தி விடும்.. அதுதான் பெற்றால்தான் பிள்ளையா படத்துக்கும் நடந்தது. படம் வெளி வந்து நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டு விழாவும் நடந்தேறிய போதும் அதில் கதாநாயகனாக நடித்தவர் துப்பாக்கி குண்டுக்கு உள்ளாகி குரல் கெட்டு சிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார் . அவரை சுட்ட மற்றைய நடிகரும் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி சிறையில் இருந்தார். படத்தை தயாரித்தவரும் அதன் பின் படம் தயாரிக்கவில்லை. இவ்வளவு களோபரத்துக்கும் காரணமான பெற்றால்தான் பிள்ளையா படம் வெளி வந்து அறுபது ஆண்டுகளாகி விட்டன. 


தொடர்ந்து எம் ஜி ஆரின் படங்கள் பலவற்றில் நடித்து வந்தவர் எம் ஆர்

ராதா. அதே போல் சிவாஜி, ஜெமினி படங்களிலும் நடித்து வந்தார் .அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ராதா இல்லாத படம் சாதா என்று குமுதம் வார இதழில் எழுதியது. எல்லாப் படங்களிலும் ராதா நடித்து வந்தார் . படத்துக்கு முப்பதினாயிரம் என்ற ரேட்டில் அவருடைய வருமானமும் எகிறிக் கொண்டிருந்தது. 

எம் ஆர் ராதா , கே ஏ தங்கவேலு , கிருஷ்ணன் பஞ்சு இவர்களுக்கு எல்லாம் வேண்டியவராக இருந்தார் நடிகை சுசிலா. பராசக்தி படத்தில் எஸ் .வி . சகஸ்ரநாமத்தின் மனைவியாக நடித்த இவர் மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவரின் கணவர் வாசு. 

சுசிலா இவருடைய மூன்றாவது மனைவி ஆவார். சுசீலாவுக்கு உதவும் பொருட்டு வாசுவை தயாரிப்பாளராக்கி ஒரு படத்தை எடுத்து உதவ முன் வந்தார்கள் ராதா, கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர். 

முத்துக்குமரன் பிக்சர்ஸ் என்ற பேரில் சுசிலா , வாசு, கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு படத் தயாரிப்பு தொடங்கியது . ராதா தன் பங்குக்கு ஒரு இலட்சம் ரூபாயை கடனாக வாசுவுக்கு கொடுத்து படத்திலும் இலவசமாக நடித்துக் கொடுத்தார்! அன்றைய கால கட்டத்தில் சிவாஜியின் குங்குமம் படத்தை இயக்கி அதில் உருவான மனக் கசப்பால் சிவாஜியுடன் முரண்பட்டிருந்த கிருஷ்ணன் பஞ்சு இருவரும் இப் படத்தை எம் ஜி ஆரின் நடிப்பில் உருவாக்க ஆர்வம் காட்டினார்கள் . எம் ஜி ஆரின் குணச்சித்திர நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் படத்தை உருவாக்க அவர்கள் விரும்பினார்கள். 1964ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. 

 இந்த படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களில் தொழிலாளி

படப்பிடிப்பின் போது காட்சிக்கான வசனம் ஒரு கட்சியை குறிக்கிறது என்று ராதா தன்னுடைய அதிருப்தியை எம் ஜி ஆரிடம் வெளியிட்டார். அது தொடர்பாக அங்கு அவர் பாவித்த சில கொச்சையான வார்த்தைகளை தொடர்ந்து எம் ஜி ஆரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எம் ஆர் ராதா இழந்தார். இப் படத்துக்கு பின் எம் ஜி ஆர் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த போதும் ஏற்கனவே தயாரிப்பில் இருந்த தாழம்பூ படத்திலும் பின்னர் சந்திரோதயம் படத்திலும் மட்டுமே அவருடன் நடிக்கும் சந்தர்ப்பம் ராதாவுக்கு கிடைத்தது. குறிப்பாக எம் ஜி ஆர் நடிக்கும் தேவர் படங்களில் கிடைத்த தொடர் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது ராதாவுக்கு ஒரு பின்னடைவானது. எம் ஜி ஆரின் நிர்ப்பந்தம் காரணமாக தனக்கு அவர் படங்களில் வாய்ப்புகள் மறுக்கப் படுகின்றன என்று ராதா கருதலானார். அதே கால கட்டத்தில் ஏனைய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டர் ராதா. 

 இது தொடர்பாக எம் ஜி ஆரை நேரில் சந்தித்து பேசி விட வாசுவுடன்

சென்றார் ராதா . அங்கு ஏற்பட்ட தகராறில் எம் ஜி ஆரை சுட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார் ராதா. 

 ஹிந்தியில் 1954ல் வெளிவந்த மஸ்தானா படத்தின் கதையைத் தழுவி இப் படத்தின் திரைக்கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பெற்றோர் யார் என்று தெரியாத ஓர் அனாதை குழந்தை அனாதை ஆனந்தனிடம் வந்து சேர்கிறது. அக் குழந்தைக்கு கண்ணன் என்று பெயரிட்டு கண்ணுக்கு கண்ணாக வளர்கிறான் ஆனந்தன். அவன் மீதுள்ள காதலால் கண்ணன் மீது அன்பை சொரிகிறாள் மோகினி. ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து வாழ்ந்த கண்ணனின் தாய் தந்தை இருவரும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் குழந்தையை ஆனந்தனிடம் இருந்து பறித்துக் கொள்கிறார்கள் அவர்கள். கண்ணனோ ஆனந்தனை பிரிந்து நோயாளியாகிறான். ஆனந்தனோ பித்துப் பிடித்தவன் போலாகிறான். பெற்றால்தான் பிள்ளையா என்று பிள்ளைப் பாசத்தால் பிதற்றுகிறான் . அவன் நிலை கண்டு மோகினி கலங்குகிறாள். இவர்கள் எல்லோரும் மீண்டும் இணைந்தார்களா என்பதே மீதி கதை . 

 

எம் ஜி ஆர் நடித்த படங்களில் அவருக்கு பிடித்த படம் இதுவாகும். சும்மா சொல்லக் கூடாது பாத்திரத்துடன் ஐக்கியமாகி உணர்ச்சி பொங்க நடித்திருந்தார் எம் ஜி ஆர். ஆடம்பர உடைகள், நெருக்கமான காதல் காட்சிகள், ஓவர் உபதேசங்கள் எதுவுமே இதில் இல்லை. படம் முழுவதும் ஏழையாகவே வருகிறார் . நீதிமன்ற காட்சியில் அவரின் நடிப்பு அற்புதம் . ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டாரே! 

 அவருக்கு இணை சரோஜாதேவி. இப் படம் தயாரான போது அவருக்கும் எம் ஜி ஆறுக்கும் இடையில் சுமுக உறவு இல்லை. இருவருக்கும் இடையில் மீடியேட்டராக பஞ்சு செயற்பட வேண்டி இருந்தது. படம் பூரவும் ஏக்கத்துடன் அவரின் காட்சிகள் நகர்கின்றன. சோகத்துடன் சௌகார் ஜானகியின் காட்சிகள் நகர்கின்றன. ஆரம்பத்தில் அட்டகாசம் பிறகு அடக்கம் இது அசோகன். நம்பியார் நெல்லூர் காந்தாராவின் துணையுடன் எம் ஜி ஆருடன் மோதுகிறார், பிறகு தனித்து முட்டுகிறார். மண்ணைக் கவ்வுகிறார். இவர்களுடன் கே . ஏ. தங்கவேலு, டீ . எஸ் . பாலையா , ஆகியோரும் நடித்தனர். 

 எம் ஆர் ராதா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதுவே

அவர் எம் ஜி ஆருடன் நடித்த கடைசிப் படமாகும். எம் ஜி ஆருடன் ஏராளமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சரோஜாதேவி இறுதியாக தனிக் கதாநாயகியாக அவருடன் நடித்த படமும் இதுவாகும். அதே போல் எம் ஜி ஆரின் முதல் படத்தில் இருந்து பல படங்களில் நடித்த டி எஸ் பாலையா கடைசியாக நடித்த எம் ஜி ஆர் படமும் இதுதான். 

 இவர்கள் எல்லோருடனும் எல்லாமாக படத்தில் கோலோச்சுபவர் பேபி ஷகிலா. கண்ணன் பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை அப்படியே வசியம் பண்ணி விடுகிறார். எம் ஜி ஆருடன் பல படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற குழந்தை நட்சத்திரம் இவர்தான். படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலி இயற்ற எம் எஸ் விஸ்வநாதன் இசை படைத்தார். கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் , செல்லக் கிளியே மெல்லப் பேசு , பாடல்கள் மனதை மென்மையாக தாலாட்டியது. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி , சக்கரை கட்டி ராசாத்தி பாடல்கள் சென்சாரிடம் சிக்கி சில வரிகள் மாற்றப் பட்டு ரசிகர்களை வந்தடைந்தன. 

 படத்தை பி என் சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். எம் ஜி ஆர் துணை வேடங்களில் நடித்த போது அவரை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு இப்போது எம் ஜி ஆர் சூப்பர் ஸ்டாரான பிறகு அவரை பக்குவமாக இப் படத்தில் இயக்கி வெற்றி கண்டார்கள். படமும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது. வெற்றி விழாவில் கலந்து எல்லோருக்கும் வெற்றி கேடயங்களை வழங்கினார் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா . படம் உருவாக காரணமாக அமைந்த ஒருவர் மட்டும் விழா மேடையில் காணப் படவில்லை! 1966ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் ஒன்பது படங்கள் வெளிவந்த போதும் அவருடைய சிறந்த நடிப்பை பறை சாற்றிய படமாக பெற்றால்தான் பிள்ளையா அமைந்தது.

No comments: