திருவாத வூரார் சிறப்பினை அறிந்து
அரசனே நாடி அமைச்சர் ஆக்கினான்
அமைச்சராய் இருந்தார் அலங்காரம் வெறுத்தார்
அவரது அகமோ புனிதமாய் இருந்தது
ஆடம் பரங்கள் அரசுச் சுகங்கள்
அமைச்சராய் இருந்தும் அகமேற்க வில்லை
ஆண்டவன் நினைப்பு ஆன்மீகச் சிந்தனை
திருவாத வூரரின் சிந்தையை நிறைத்தது
பொன்னையும் பொருளையும் பொருட்டென எண்ணா
மன்னனின் அவையில் இருந்தார் அவரும்
மன்னனின் மனத்தின் மாறு பாட்டினால்
அல்லல் பட்டதை ஆண்டவன் பொறுக்கா
அமைச்சரைக் காத்து அரசனை மாற்றினார்
வாதவூர் பிறந்தார் பரமனைக் கண்டார்
மனதில் உள்ளதை மாணிக்கம் ஆக்கினார்
மனிதராய் பிறந்த மாணிக்க வாசகர்
சொல்லச் சொல்ல சொக்கன் எழுதினார்
சொக்கனே சொக்கினார் சுந்தரத் தமிழில்
செந்தமிழ் தேனாய் திருவாசகம் மலர்ந்தது
உருகா மனத்தையும் உருகிட வைக்கும்
திரு வாசகத்தைத் தேனே என்போம்
உருவாய் அருவாய் இருக்கும் இறைவன்
உணர்வாய் இருப்பான் திரு வாசகத்தில்
மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே
அழுதார் தொழுதார் அவனடி பற்றினார்
அழுகை அனைத்தும் அருந்தமிழ் ஆனது
ஆனது அனைத்தும் தத்துவக் குவியலே
அறுபத்து மூன்று நாயன் மாரும்
அரனது அருளினைப் பெற்றவர் ஆவார்
திரு வாசகத்தேனை ஈந்தவர் மட்டும்
சிவனது பாதத்தின் அருகிலே அமர்ந்தார்
உருவில் ஆணாய் உணர்வில் பெண்ணாய்
திருவாசக மனைத்தும் செப்பினார் வாசகர்
அதனால் உருக்கம் அதனால் இரக்கம்
அனைத்தும் வாசகர் தமிழாய் மலர்ந்தது
எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவனருள்
எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவமே
எண்ணில் அடங்கா எத்தனை தத்துவம்
தத்துவம் அனைத்தும் தளையெலாம் போக்கும் !
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment