உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்
இலங்கை – ஜேர்மனி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் - சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் விரிவாக்கம் ; பெண் தொழில்முனைவோருக்கும் சிறப்பு ஆதரவு
டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது - ஈ.பி.டி.பி. பெருமிதம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கை வருகை!
சீனா - இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராக உள்ளோம் - சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்
Published By: Vishnu
03 Jul, 2026 | 05:24 AM
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச பயண ஊடகமான பிக் 7 டிராவல் நடத்திய சமீபத்திய மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய புகழ் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை அமைந்துள்ளது.
அதன்படி, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்ட காலமாக கருதப்பட்ட கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை விஞ்சி, இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனைக்கு முக்கிய காரணம் இலங்கையின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஒரு சிறிய பகுதிக்குள் பல்வேறு சூழல் அமைப்புகளை அனுபவிக்கும் சுற்றுலா அனுபவம் ஆகியவையே என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இயற்கை சூழல், கலாச்சாரம், வனவிலங்கு அனுபவங்கள் மற்றும் வசதியான பயண வசதிகள் ஆகியவற்றை ஒரே பயணத்தில் இணைக்கும் இடங்களின் மீது சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து வருவதால், உலகளாவிய தீவு சுற்றுலாத் துறையில் இலங்கை ஒரு புதிய அளவுகோலாக மாறி வருகிறது என்பதையும் இந்த மதிப்பீடு எடுத்துக்காட்டியுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கை – ஜேர்மனி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் - சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் விரிவாக்கம் ; பெண் தொழில்முனைவோருக்கும் சிறப்பு ஆதரவு
Published By: Digital Desk 2
02 Jul, 2026 | 07:16 PM
(செ.கவிஷனா)
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியமும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையமும் இணைந்து, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை வலுப்படுத்தவும் ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று (1) கையெழுத்திட்டன.
ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையத்தின் கலாநிதி ஜூலியா பெல்லிங்ஹவுசென் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2019ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு மையத்தின் கலாநிதி ஜூலியா பெல்லிங்ஹவுசென், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிலையான வணிக உறவுகளை ஏற்படுத்துவதற்கும் நீண்டகால உறவுகளை உருவாக்குவது அவசியமாகும்.
அத்துடன் தொழில்நுட்ப நிபுணத்துவம், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடனான வலுவான தொடர்புகள் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து இலங்கை ஏற்றுமதி வாரியத்துடன் இணைந்து ஆதரவளிக்க ஜேர்மனி இறக்குமதி ஊக்குவிப்பு மையம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது.
இந்த இருதரப்பு உறவுகளின் மூலம் குறிப்பாக, இயற்கை மூலப்பொருள் துறையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களின் திறன், மேம்பாட்டு சந்தை விபரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது போன்ற பல நன்மைகள் ஏற்கனவே பெற்று கொள்வதன் மூலம் நிலையான வணிக உறவுகளை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு திட்டங்கள் மூலம் ஏற்றுமதி சார்ந்த பெண் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் உலகளாவிய சந்தைகளில் தடம் பதிப்பதற்கான நல்வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன என்றார். நன்றி வீரகேசரி
டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது - ஈ.பி.டி.பி. பெருமிதம்
Published By: Digital Desk 2
02 Jul, 2026 | 05:46 PM
தீவகத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுள் மிகவும் அற்புதமான – பெயர் சொல்லக்கூடிய திட்டமாக மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டம் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் பெருமைபட தெரிவித்துள்ளார்.
பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்கக்கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு குறித்த கலப்புமுறை மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி உதவியில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும்
நயினாதீவு ஆகிய தீவுகளில் குறித்த மின் உற்பத்தித் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நெடுந்தீவில் முன்னெடுக்கபட்டு வருகின்ற கட்டுமாணப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும்போதே, ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரினால் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவின் வளர்ச்சியில் தொடர்ந்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் இன்றி இருண்டு கிடந்த நெடுந்தீவுக்கு ஒளியூட்டும் நோக்கோடு 1996 ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மின்பிறப்பாக்கி ஒன்றினை எடுத்துச் சென்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மின்சாரப் பாவனையை ஆரம்பித்துவைத்தார்.
பின்னர், 2001ஆம் ஆண்டு புனர்வாழ்வு அமைச்சராக இருந்த காலத்தில் மின்சார சபை மூலம் பாரிய மின்பிறப்பாக்கியை பொருத்தி தொடர்ச்சியான மின் விநியோகத்தினை உறுதிப்படுத்தினார். எனினும், மின்பிறப்பாக்கியை செயற்படுத்துவதற்கான எரிபொருள் கடல் வழியாக எடுத்துச் செல்லவேண்டியிருப்பதால், மின் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்துவந்த நிலையில், கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக பணியாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தீவகத்துக்கு குறைந்த விலையில் நிலையான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டத்தினை அரச – தனியார் கூட்டு முதலீட்டில் அமைப்பதற்கு தீர்மானித்த கடந்த கால அரசாங்கம், தனியாருக்கான விலைமனுக் கோரலை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சீனாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனத்துக்கு குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.
இது தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பூகோள அரசியல் விவகாரம் இருக்கின்ற நிலையில், தீவகத்தில் சீன நிறுவனத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குவது, இந்தியாவின் நலனுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்ற கருத்தினை முன்வைத்த நிலையில் குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டது.
அதேவேளை, தீவகத்தில் முன்னெடுக்க திட்டமிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க கலப்பு முறை மின்சார உற்பத்தி திட்டத்திற்கு முழுமையான நிதி உதவி வழங்கி அதனை அமைத்துத் தருவதற்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது.
அதன் அடிப்படையில், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவுக் கட்டத்தினை அடைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கை வருகை!
02 Jul, 2026 | 04:36 PM
(நமது நிருபர்)
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் அலி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, அவர் நேற்று (1) இலங்கை வந்தடைந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர் தலைமையிலான தூதுக்குழுவினரை, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விதான ஆராய்ச்சி, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.
6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு கலந்துரையாடல், ஸ்ரீ ஜயவர்த்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நாளைய தினம் (3) ஆரம்பமாகவுள்ளது.
இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடலானது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், பிராந்திய பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சிகள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் முக்கிய தளமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் அலி, தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சீனா - இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராக உள்ளோம் - சீனத் தூதுவர் கீ சென்ஹொங்
Published By: Digital Desk 2
02 Jul, 2026 | 05:24 PM
(ஆர்.ராம்)
ஜனாதிபதிகளான ஷி ஜின்பிங் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோரால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துக்களை முழுமையாகச் செயற்படுத்துவதற்கும், இரு நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான வளர்ச்சிப் பாதைகளை கைகோர்த்து ஆராய்வதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சீனா-இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீனாவுடன் பயணிப்பது என்பது வாய்ப்புகளுடன் பயணிப்பதாகும். சீனாவை நம்புவது என்பது நாளைய தினத்தை நம்புவதாகும். சீனாவில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (1) இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றத்தின் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பிரதான நிகழ்வு பீஜிங்கில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளர் ஷி ஜின்பிங், கட்சி கடந்து வந்த புகழ்பெற்ற பயணத்தை மீள்நோக்கியதுடன், சீன மக்களினதும் கட்சியினதும் எதிர்கால வளர்ச்சிப் பாதையின் பிரகாசமான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய வளர்ச்சி முன்முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு
முன்முயற்சி, உலகளாவிய நாகரீக முன்முயற்சி மற்றும் உலகளாவிய ஆளுமை முன்முயற்சி ஆகிய நான்கு முக்கிய முன்முயற்சிகள், காலத்தின் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்து, சீனாவின் அறிவையும் தீர்வுகளையும் பகிர்ந்து வழங்கியுள்ளன. இந்த முன்மொழிவுகள் மற்றும் முன்முயற்சிகளைப் பாராட்டி உலகளவில் சுமார் 160 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு வரலாற்றுக் காலம் தொட்டே நிலவி வருகிறது. இருநாட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்கியுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளும் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்துடன் ஒருவரையொருவர் நடத்துகின்றன.
அரச ஆளுமை குறித்து நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பொதுவான வளர்ச்சிக்கான வழிகளையும் ஆராய்கிறோம். ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான வெற்றிகரமான சந்திப்பு சீனா-இலங்கை உறவுகளுக்கான புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
கட்சிகளுக்கு இடையிலான உறவு என்பது சீனா-இலங்கை உறவுகளின் முக்கிய அங்கமாகும். இருதரப்புத் தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
சுயாதீனம், முழுமையான சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவரின் உள்விவகாரங்களில் மற்றொருவர் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆளுமை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் நவீனங்கள் போன்ற திட்டங்களில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களாலும் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துக்களை முழுமையாகச் செயற்படுத்துவதற்கும், இரு நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான வளர்ச்சிப் பாதைகளை கைகோர்த்து ஆராய்வதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சீனா-இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.
அத்துடன், தற்போதைய உலகில், ஒரு நூற்றாண்டில் காணாத மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. காலத்தின் ஓட்டம் ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் கோருகிறது. உலகிற்கு என்ன நடந்தது, நாம் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?' என்ற பெரும் கேள்விக்கு, சீனா தனது நான்கு முக்கிய முன்முயற்சிகளின் வழிகாட்டுதலுடன், அழகான உலகத்தைக் கட்டியெழுப்ப அனைத்து நாடுகளுடனும் கைகோர்க்கத் தயாராக உள்ளது.
105ஆண்டுகள் என்பது ஒரு வரலாற்று மைல்கல், அதைவிட முக்கியமாக இதுவொரு புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளியாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுடன் பயணிக்கிறது. காலத்துடன் முன்னேறுகிறது. சீனாவுடன் பயணிப்பது என்பது வாய்ப்புகளுடன் பயணிப்பதாகும்;. சீனாவை நம்புவது என்பது நாளைய தினத்தை நம்புவதாகும்;. சீனாவில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.
ஒரு புதிய வரலாற்றுத் தொடக்கப் புள்ளியில் நின்றுகொண்டு, உலக நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் இணைந்து சரியான பாதையைப் பின்பற்றவும், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், காலத்தின் பணியைச் சுமந்து, பரஸ்பர ஒத்துழைப்பின் புதிய பக்கத்தை எழுதவும் நாம் தயாராக உள்ளோம் என்றார். நன்றி வீரகேசரி





No comments:
Post a Comment