என்ன செய்யப் போகிறாய்? (கன்பரா யோகன்)


உங்களில் எவரேனும் ஏற்கனவே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவரானால் மேலே தலைப்பிலுள்ள கேள்வி உங்களுக்கு மிகவும் பரிச்சியமானதாகவிருக்கும். அதிலும் குறிப்பாக நீங்கள் ஒய்வு பெற்ற இறுதிநாளில் இதை எல்லோரும் அடிக்கடி கேட்டு உங்களை சலிப்படைய வைத்திருப்பார்கள்  

எனக்கு அண்மையில் இப்படியான கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டி வந்தது. உண்மையில் நான் இன்னும் ஒய்வு பெற்றுக் கொள்ள வில்லையாயினும் நீண்ட சேவை விடுமுறையில் நின்று அதன் முடிவில் பிறகு ஒய்வு பெறலாம் என்று எண்ணியிருந்தேன். இதை தெரிவித்த போது வீட்டில் முதலாவது கேள்விக்கணை மனைவியிடமிருந்து வந்தது.

‘வீட்டில் நின்று என்ன செய்யப் போகிறீர்கள்?’

எமது குடும்ப வைத்தியரிடம் போனபோது ‘ஓய்வெடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்? நான் உம்மில் பார்க்க வயது கூடியவன் இன்னும் வேலை செய்கிறேனே!’ என்றார்.

இன்னொரு பெண்மணி ‘உமக்கு இன்னும் வயதாகவில்லையே என் அதற்குள் அவசரப்பட்டு ஒய்வு பெருகிறீர்?’ என்றார் - அவருக்கு ஒருவேளை என் வயது தெரியாமலிருக்கலாம்

முதலிலேயே சொல்லி விடுகிறேன் - நான் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்ததை விட என்னென்ன சுவாரஸ்யமான கேள்விகள் வந்தன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

இன்னொரு சுவாரஸ்யமான கேள்வியை வேலையில் எனது குழுவில் வேலை செய்த டான் என்று நாம் சுருக்கமாக அழைக்கும் டானியல் கேட்டான்.

டான் இளம் பொடியன், அவனுக்கு இந்த வருடம் வயது முப்பது. அவன் பிறந்த அதே வருடமே நான் வேலையில் சேர்ந்திருந்தேன் என்றாலே உங்களுக்கு புரியும் என் வயது.

' நீ நாளாந்தம் வேலைக்கு அணிந்து வரும் நீளக்கை ஷேர்ட்டுகளை ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறாய்? என்று டான் கேட்டான்

எனது உடைகளை நன்கு அவதானித்திருக்கிறான் என்று தெரிந்தது. உண்மையில் நான் கடும் கோடையிலும் முழுக்கை ஷேர்ட் அணிந்து தொப்பி போடாமல் வேலைக்கு சென்றது குறைவு.

அதைவிட கன்பராவில் நிலவும் குளிர் காலநிலைக்கு இது அவசியமல்லவா? தலை முடி உதிர்ந்து போன தலைக்குள் வின்டர் குளிர் ஊடுருவல் செய்வதால் வரும் தடிமன் தாக்குதல்களிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டுமல்லவா?

நான் வெளிநாட்டுக்குப் புறப்படப் போகிறேன் என்று 1990 இல் எமது நாடக ஆசிரியர் சிதம்பரநாதன் அவர்களிடம் சொன்னாபோது அவர் சற்று சலிப்புற்று என்னிடம் பகிர்ந்து கொண்டது இன்று உண்மையாகிவிட்டது என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.

‘நீ அங்கு வெளிநாட்டில் முழுக்கை ஷேர்ட்டுடன் திரிவாய்’ என்றார் அவர்.

அவர் அன்று சொன்னபோது அதன் விளக்கம் எனக்குத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் முழுக்கை ஷேர்ட்டுடன் அவர் அவதானித்த பலரை வைத்தே இப்படிச் சொல்லியிருக்கிறார் போலும்.

ஆனால் இப்போது கைகளுக்குப் பூசும் சில சன் ஸ்கிரீன்களினால் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பார்க்கும் போது முழுக்கை ஷேர்ட் பரவாயில்லை போலுள்ளது.

ஊரிலேயே அம்மா நான் வெளியில் போகும்போது ‘வெய்யில் மண்டையில் சுட்டுப் போடும் ஓலை   தொப்பியைப் போடு, காலில் சூட்டு மணல், தார் சுட்டுப்போடும் செருப்பை போடு’ என்றெலாம் அதட்டி வளர்த்தார். அம்மாவுக்கு, அப்புவும் இப்படியே அல்லது இன்னும் அதிகமாக அதட்டி வளர்த்திருப்பார்.

மீண்டும் தலைப்புக்கு வருகிறேன்

மேலே சொன்ன ‘என்ன செய்யப் போகிறாய்?’ கேள்விகளை விட சிலர் தாங்களாகவே சொன்ன ஆலோசனைகளும் சுவாரஸ்யமாகவிருந்தன.

‘நீ விடிய எழுந்து அவசர அவசரமாக இனி வேலைக்காய்ப் புறப்படத் தேவையில்லை, இனி அலாரம் உனக்குத் தேவையில்லை’

‘எரிபொருள் விற்கும் விலையில் கார் ஓட்டும் வேலை இல்லை, செலவு மிச்சம்’ என்றும் ஒரு தரப்பு சொன்னது.

‘வாழ்க்கையை இனித்தான் என்ஜோய் பண்ண வேணும், உலகத்தை ஒருமுறை சுற்றி வந்தால் நீ அதிஷ்டக்காரன்.’

‘வீட்டில் சும்மா இருந்தால் வருத்தம் மன வருத்தம் வந்து விடும், ஏதாவது உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.’

‘ஏன் சமையலைக் கூடப் பழகலாமே. நல்ல பொழுது போக்காக அமையும்.’

வரப்போகும் நாட்களில் இன்னும் பல கேள்விகளையும், பதில்களையும் எதிர்கொள்வேன் என்று எண்ணுகிறேன்.

சரி உங்கள் முறை வரும்போது நீங்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

என்ன சொல்லப் போகிறாய் என்று ஒரு நல்ல சினிமாப் பாடலும் இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தால் நீங்கள் புத்திசாலி.

 

 

No comments: