'தூயஒளி' படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்
கிளிநொச்சி சொல்லிசை பாடகரின் பிணை மனு: யாழ். மேல் நீதிமன்றில் விசாரணை!
சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளும் இவர்களே: பொன்சேக்கா சுட்டிக்காட்டு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் விடுதலை: நாமல் வரவேற்பு!
'தூயஒளி' படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
11 Jun, 2026 | 11:35 AM
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்று (11) புதன்கிழமை நடைபெற்றது.
குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததை அடுத்து, மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி குருநகர் பகுதியில் இருந்து 'தூயஒளி' படகில் கடலுக்குச் சென்ற 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலையானவர்களின் நினைவாக குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியிலையே அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. நன்றி வீரகேசரி
ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்
10 Jun, 2026 | 05:18 PM
இந்து ஆலயங்கள் மட்டுமல்ல பிறமத ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கு எத்தகைய சேவைகளை செய்த வேண்டுமோ அதனை அறிந்து செய்ய வேண்டும் என தொல்லிப்பளை துர்கை அம்மாள் தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் ஆலய யாத்திரிகர் மண்டபத்தில் மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையத்தை ஆரப்பித்து வைத்து உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் தேவஸ்தானம் ஆற்றும் சமூகசேவை பணிகளில் ஒன்றான மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையம் இங்கு திறந்துவைக்கப்படுகிறது.
ஈழத் திருநாட்டில் ஆலயங்கள் சமயப்பணி சமூகப்பணி ஆற்ற வேண்டும் என்ற உன்னதமான மகத்துவமான குரலை ஓங்கி ஒரிக்க செய்தவர் தங்கம்மா அப்பாகுட்டி அவரது ஆற்றுப்படுத்தலில் வளர்ந்தநான் தற்போது எமது தேவஸ்தானம் பல்வேறு சேவைகளை செய்துவரும் வேளையில் வலி வடக்கு மக்களின் நன்மை கருதி யாழ் போதனாவைத்தியசாலை வைத்தியர்களையும் யாழ்பாண மருத்துவ பீட பேராசிரியர்களையும் இங்கு அழைத்து இலவசமாக வைத்திய ஆலோசனைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
அந்த வகையில் தெல்லிப்பளை தேவஸ்தானத்தின் உப தலைவர் வைத்தியர் றவிறாச் அவரது முயற்சியினால் இங்கு பல வைத்திய நிபுணர்கள் இங்கு வருகைதருகிறார்கள் அவர்கள் மக்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள்.
இவர்களுடன் பிரதேச வைத்திய அதிகாரிகள் ,தாதியர்கள் ,மருத்துவ பணியாளர்கள் எமது தேவஸ்தானத்தில் கடமையாற்ற முன்வந்துள்ளார்கள். எமது தேவஸ்தானம் ஆதரவற்ற பெண்பிள்ளைகளுக்கான மகளிர் இல்லங்களையும் ,மற்றும்பல சமூகப் பணிகளையும் ஆற்றிவருவது பலருக்கும் தெரிந்த விடயம் மேலும் பன்னிரு திருமுறைகள் வெளியீட்டு,கந்தபுராணம் வெளியீடு செய்து சகல ஆலயங்களுக்கும் வழங்கிவருகிறது .
ஏழை மாணாக்கர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வசதியாக நிதியுதவி செய்து வருவதுடன் பாரம்பரிய சித்த வைத்தியத்துறையை பேணும் வகையில் சுன்னாகத்தில் மூன்றுமாடி கட்டடத்தில் அமைத்து அதில் சித்த வைத்தியசாலையை ஆரம்பித்து அதில் சித்த வைத்திய பாராம்பரியத்தை வைத்தியசாலையாக இயக்கி வருகின்றோம்.
அதற்கு அடுத்த கட்டமாக ஆங்கில வைத்திய ஆலோசனை வைத்திய சேவையை தெல்லிப்பளை துர்காதேவி யாத்திரிகர் விடுதியில் மாதோறும் இயக்க ஆரம்பித்துள்ளோம்.
எனவே பொது மக்கள் இவற்றை நன்றாக பயன்படுத்த வேண்டும் அதேநேரத்தில் இத்தகைய பணிகளை எனைய தேவஸ்தானங்களும் எனைய பிற ஆலயங்களும் இப்பணிகளில் ஈடுபட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
வேறுமென சம்பிரதாயங்கள் ,சடங்குகள் திருவிழாக்கள் மட்டுமல்ல மக்களுக்கு என்ன தேவையோ அதனை ஆலயங்கள் செய்ய வேண்டும் என்பதனை எங்கள் தேவஸ்தானம் முழுமையாக செய்து வருகிறது.
இந்த வைத்திய சேவையை செய்வதற்கு அனுமதித்த யாழ் போதனா வைத்தியசாலை, வடக்கு மாகாண சுகாதர அமைச்சு மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கு அதேவேளை பொதுமக்கள் இந்த சேவைகளை முழுமையாக பெற்றுகொள்ள வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
கிளிநொச்சி சொல்லிசை பாடகரின் பிணை மனு: யாழ். மேல் நீதிமன்றில் விசாரணை!
11 Jun, 2026 | 07:06 PM
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கேசவன் சயந்தன் , சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி பொலிஸார் முற்படுத்தும் போது தாக்கல் செய்த B அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும் , அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்மனு தாரர்களான , சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை இயன்ற விரைவில் அனுப்புமாறும் , அறிவித்தல் திரும்பும் திகதியை நாளைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திக்தியாக மன்று குறிப்பிட்டு , அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளது.
அதேவேளை சொல்லிசை கலைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் , சொல்லிசை கலைஞனின் கைது அடிப்படை உரிமை மீறல் என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த வழக்கு நாளைய தினம் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளும் இவர்களே: பொன்சேக்கா சுட்டிக்காட்டு
Published By: Digital Desk 1
12 Jun, 2026 | 08:15 AM
(க.சிவலிங்கமூர்த்தி)
சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்ட ஒருவராவார். எனவேதான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இவர்கள் நிச்சயம் இருக்கின்றார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து பொறுப்பேற்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான தங்கம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று வியாழக்கிழமை (11) அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சாட்சியமளித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சுரேஷ் சலே இருப்பதாக நான் நான்கு வருடங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்தில் சந்தேகம் வெளியிட்டிருந்தேன், இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். ஏனெனில், சஹரானுடன் மிகவும் நெருக்கமான தொடர்பைப் பேணிய ஒருவராக சுரேஷ் சலே காணப்படுகின்றார்.
சஹரானுக்குப் பணம் செலுத்தத் தொடங்கியதும் சுரேஷ் சலேதான். யுத்தம் நடைபெற்ற காலத்தில் சஹரானுக்கு இராணுவத்துடன் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அத்துடன் சஹரானின் செயற்பாடுகளினால் முழுமையான பலனைப் பெற்றுக்கொண்டது கோட்டாபய ராஜபக்ஷவே ஆவார். சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்ட ஒருவராவார். எனவேதான், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இவர்கள் நிச்சயம் இருக்கின்றார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
இந்த விசாரணைகள் இவ்வளவு காலம் தாமதித்ததற்குக் காரணம் அரசாங்கங்கள் மாறுவதும், இந்த விவகாரம் திடீரென மேலெழுந்து பின்னர் அப்படியே அமுக்கப்படுவதுமே ஆகும். நல்லாட்சி அரசாங்கமும் இதனைச் சரியான முறையில் கையாளவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம் இந்த விவகாரத்தை முழுமையாக மூடிமறைத்திருந்தது. எனவே, தற்போதைய அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் நியாயமானதாகும்.
சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட போது, அவர் ஒரு இராணுவ வீரர் எனக் கூறி தற்பொழுது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்னுடன் சேர்த்து ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என 35 அதிகாரிகள் எவ்வித காரணமுமின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, இந்த ஆர்ப்பாட்டங்களைச் செய்பவர்கள் இலங்கையில்தானே இருந்தார்கள்? அப்போதெல்லாம் நாங்கள் இராணுவ வீரர்கள் இல்லையா? இந்த யுத்தத்தை முன்னின்று வழிநடத்தி, திட்டமிட்டு, வெற்றியைத் தேடித்தந்தது இந்த சுரேஷ் சலேயா? எனவே, அந்தப் பிரசினையை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிடமே கேட்க வேண்டும். கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட உடனேயே, இந்தத் தரப்பினர் பதற்றமடைந்து வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தற்போது சுரேஷ் சலே சிறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நிலையில், ஒரு இராணுவ அதிகாரிக்கு நடத்தும் விதம் சரியில்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நான் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் இன்றி சிறிய அறையொன்றில் மாதக்கணக்கில் வைக்கப்பட்டிருந்த போது, எனது மனைவிக்கு மாத்திரமே ஒரு நாளைக்கு ஒரு முறை வந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தற்பொழுது சுரேஷ் சலேயின் முழுப் பரம்பரைக்குமே, அதாவது அவரது மனைவி, தாய், சகோதரர், மகன் என அனைவருக்கும் அவரை வந்து பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே தற்பொழுது அவருக்கு எவ்வளவு சிறந்த முறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. கைது செய்யப்படும் நபர்கள் அந்தச் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும், அங்கு வி.ஐ.பி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் முறையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்துடனும் முயற்சியுடனும் செயற்படுகிறது. இதுவரை காலமும் இந்த விடயத்தில் நியாயமான விசாரணைகள் நடக்கவில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயன்முறை முற்றிலும் சாத்தியமானதொன்றாகும். அது வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன், இந்தத் திட்டம் வெற்றியடைவதற்காக அரசாங்கத்துக்கு எம்மால் வழங்கக்கூடிய அனைத்துப் பலத்தையும் எந்நேரமும் வழங்குவோம் என்றார். நன்றி வீரகேசரி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் விடுதலை: நாமல் வரவேற்பு!
13 Jun, 2026 | 01:21 PM
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் விடுவிக்கப்பட்டமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
இது குறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இக்கலைஞரின் விடுதலைக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்துத் தான் எந்தவொரு கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
"இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இளம் கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார். அது நடந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த இளம் கலைஞர் தனது திறமைகளையும் எதிர்கால இலட்சியங்களையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வாழ்த்துவதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment