வாழ்வாங்கு வாழ்ந்துயர்ந்த வள்ளலுக்கோர்
கவிதையஞ்சலி
வளம்;மிகுந்த
செந்தண்மை அந்தணப் பெரியோன்
வாழ்ந்துயர்ந்த
பொன்மயிலை நாதன் இன்று
களம்மாறி இறையடிகள் சேர்ந்தா ரென்ற
கவலைச்சொல்
இதயத்தே வேலைப் பாச்சும்!
குளமாகும் விழியிரண்டும்! உள்ளம் சோரும்!
கூற்றுவனா
பூத்தேரிற் கவர்ந்து சென்றான்?
அழுதழுது பிரிவால்உறும் குடும்பத் தார்க்கு
ஆறுதலைச்
சொல்வதற்கு வார்த்தைதா னுண்டோ?
பொய்யாகா தாவிந்தச் செய்தி யென்றே
புலம்பியழும்
பலருடனே கவல்கின் றேனே!
கொய்யாத பூப்போலச் சிரித்து மூத்தோர்
கூட்டத்தில்
மலர்ந்தமுகத் துடனே எழுந்து
ஐயாபொன் மைலைநாதன் பாடி யின்று
அறுபத்துஐந்து
நாள்கூட ஆக வில்லை
மெய்யாக ஒருவருமே எதிர்பர்க்கா வண்ணம்
மேலுலகம் சென்றனனே வையம் ஈதோ?
ஈரிரண்டு முத்துகளைப் பெற்று வளர்த்தார்!
ஏற்றமிகு
கலையெல்லாம் கற்பிக்க வைத்தார்!
சீரிதென மணவாழ்வில் பிணைத்தார்! அவர்கள்
சிறந்துயர்ந்து
பெற்றபேரப் பிள்ளை களைத்தினம்
வாரியணைத் தேமகிழ்ந்து பூரிப்போ டன்பாய்
வழிநடத்;தி வரும்வேளை அந்தோ பரிதாபம்
தேரிலேற்றிக் கூற்றுவனும் உயிர்ப றித்துத்
தென்திசையாற்
சென்றானே கொடுமை அம்மா!
நெடிதுயர்ந்த ஆண்மைமிகு அழகுத் தோற்றம்!
நிறைமனத்தோ
டுறவுகளை அணைக்கும் பெற்றி!
வடித்தெடுத்த பழையபத்திப் பாடல் தேர்ந்து
வழங்குமவர்
கர்நாடக சங்கீத ஞானம்!
துடிதுடிப்பாய்ச் செயலாற்றும் அழகே யழகு!
துணையாகும்
நண்பர்களிடம் காட்டும் கேண்மை!
கடிகமழ்தார் கொன்றையணி கந்தவேள் அழைக்கக்
கடுந்துயரில்
தவிக்கவிட்டுக் கழல்நாடி னாரே!
மருத்துவத்துறைக்
கதிர்ப்படப்பதி வாள ராகி
மாண்புடனே
பலர்புகழப் பணியாற்றி உயர்ந்;தார்!
திருத்தகவே இல்லறத்தில்
நல்லறம் விஞ்சச்
சீர்மையொடு
மனிதருக்குள் மாணிக் கமாக
வரித்ததுணை யுடனின்ப வாழ்விலே
ஒளிர்ந்தார்!
வாஞ்சையொடு
கடமையெலாம் நிறைவா யியற்றி
வருத்தமின்றிப் பற்றறுத்து இறையோ டிணைந்தார்!
வழுத்துகிறோம்!
நினைவிலென்றும் வாழ்வார்! சாந்தி!.
சந்திக்கும் வேளையிதழ்
இன்சொல் பேசும்!
சாந்தமுகம்
அவருள்ளத் தூய்மை செப்பும்!
சிந்தித்து முறுவலொடு செப்புஞ் சொற்கள்
சீர்;மைமிகு வித்துவத்தின் முதிர்ச்சி கூறும்!
வந்திப்பேன்; தினம்அவரை! அன்பர் நெஞ்சில்
வாடாத
மல்லிகைபோல் மலர்ந்தே இருப்பார்
செந்தமிழால் வைதாலும் அருளும்
முருகன்
செஞ்சரணந்
தனிற்கலந்தார் தெய்வந் தானே!
சென்ற 26 - 04 -2026 அன்று சிவபதம் எய்திய அமரர்
திரு பொன் மயிலைநாதன் அவர்களின் ஆத்ம சாந்தி வழிபாட்டிலே பாடப்பெற்ற
கவிதையஞ்சலி.
இயற்றியவர்
பல்மருத்துவ கலாநிதி
பாரதி இளமுருகனார்.
(வாழ்நாட்சாதனையாளர்)

No comments:
Post a Comment