உலகச் செய்திகள்

 வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!

குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது



வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது

Published By: Digital Desk 3

11 Jun, 2026 | 04:20 PM

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது நாளாகவும் கடுமையான இனவாத வன்முறைகளும் கலவரங்களும் வெடித்துள்ளன. 

நேற்றிரவு நடந்த இந்த மோதல்களில் 12 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 16 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வட அயர்லாந்துக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் ஹிலாரி பென் தெரிவித்துள்ளார்.

பெல்பாஸ்டிற்கு சற்று வெளியேயுள்ள ‘கிளென்கோர்ம்லி’ பகுதியில் உள்ள ஒரு வீதியில் திரண்டிருந்த வன்முறையாளர்கள் பொலிஸார் மீது கல், போத்தல்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்கியதுடன், குப்பைத் தொட்டிகள் மற்றும் திணைக்கள வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த நேரிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு வட பெல்பாஸ்டில் ஸ்டீபன் ஓகில்வி என்ற 40 வயதுடைய நபர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலே இந்த வன்முறைகளுக்குக் காரணமாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓகில்வி தனது இடது கண்ணை இழந்துள்ளதுடன், கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக சூடானைச் சேர்ந்த 30 வயதான ஹாதி அலோதித் என்ற புகலிடக்கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பெல்பாஸ்ட் நீதிமன்றத்தில் கொலை முயற்சி மற்றும் என்.எச்.எஸ் சுகாதார ஊழியரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது ஒரு சாதாரண எதிர்ப்புப் போராட்டம் அல்ல, திட்டமிட்ட இனவாதத் தாக்குதல் என ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஹிலாரி பென் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "மக்களின் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை நீங்கள் இலக்கு வைத்தால், அதை ‘இனவாதக் காடைத்தனம்’ என்றுதான் விவரிக்க முடியும். மக்கள் வேலைக்குச் செல்லும் வழியில் அவர்களது வாகனங்களை மறித்து, அவர்களின் தேசிய இனம் எதுவென்று முகமூடி அணிந்த கும்பல் விசாரிப்பதாக முறைப்பாடுகளி வந்துள்ளன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது." எனத் தெரிவித்துள்ளார்.

வன்முறையாளர்கள் வெளிநாட்டு மற்றும் மாற்று இனப் பின்னணியைக் கொண்ட சுகாதார ஊழியர்களையும் இலக்கு வைத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மாற்றுத் தோல் நிறத்தைக் கொண்ட பெண் தாதியர் ஒருவரை முகமூடி அணிந்த நான்கு ஆண்கள் வைத்தியசாலை வரை துரத்திச் சென்றுள்ளனர். எனினும், அவர் தைரியமாகத் தனது கடமைக்குச் சென்றுள்ளார்.

'வைட்அபே' வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அங்குள்ள சில வெளிநோயாளிப் பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கலவரங்கள் குறித்துக் கடுமையான அதிர்ச்சியை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஓகில்வியின் குடும்பத்தினர், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், "எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்தத் துயரமான சம்பவத்தை, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ யாரும் பயன்படுத்த வேண்டாம். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்கள் ஆற்றும் பங்களிப்பு மகத்தானது. எங்களது அன்புக்குரியவரின் பெயரால் இந்த வன்முறைகளைச் செய்ய வேண்டாம்." என குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தற்போது நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்காட்லாந்தில் இருந்து விசேட அதிரடிப் பொலிஸ் குழுக்கள் மற்றும் மோப்ப நாய்கள் வட அயர்லாந்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகப் பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி 







ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு

Published By: Digital Desk 3

11 Jun, 2026 | 10:13 AM

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது. 

ஈரானின் அரசுக்குச் சொந்தமான 'பிரஸ் டிவி' ஊடகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் 'காதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகம் இந்த உத்தியோகபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எண்ணெய் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு சர்வதேச கப்பலும் இனி இந்த நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். தெற்கு ஈரானிய மாகாணத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் உட்பட, அதன் 'தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளுக்கு' பதிலடியாகவே இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் கூறுவதை அமெரிக்க இராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், 

"சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் இன்று இரவும் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக வழக்கம் போல் பயணித்துக் கொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஈரானியப் படைகளால் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை "முற்றிலும் தவறானது" என அமெரிக்க மத்திய கட்டளையகம்  நிராகரித்துள்ளது. "எந்தவொரு அமெரிக்க போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை" என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள இந்த கடல் மார்க்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருவதால், சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.   நன்றி வீரகேசரி 





இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!

08 Jun, 2026 | 03:15 PM

சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்து, நாட்டின் பல்லினக் கலாச்சார மாதிரியை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 14 சர்ச்சைக்குரிய பதிவுகளை உடனடியாக முடக்குமாறு யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணையக் குற்றவியல் பாதிப்புகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூர் பொலிஸாரினால் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உள்நாட்டு அமைச்சின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, 

கடந்த மே மாதம் முதல் சிங்கப்பூரின் கலாச்சார அடையாளம் மற்றும் இன அரசியல் குறித்து சீன மொழி இணையத்தளங்களில் சில காணொளிகள் உலா வரத் தொடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து, "சிங்கப்பூர் தற்போது இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது" என்றவாறான தீவிர இனவாத மற்றும் தூண்டல் நாடகங்களைக் கொண்ட பதிவுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் அநேகமாக சீனாவை தளமாகக் கொண்ட சமூக வலைத்தள பக்கங்களில் இருந்தே உலகளாவிய ரீதியில் பரப்பப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ள சனத் தொகை புள்ளிவிபரங்களின்படி, அந்நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் இன ரீதியான பரம்பலில் சீன வம்சாவளியினர் 75 சதவீதமானவர்களும், மலாய் வம்சாவளியினர் 15 சதவீதமானவர்களும், இந்திய வம்சாவளியினர் 7% – 9% சதவீதமானவர்களும் உள்ளனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் ஒட்டுமொத்த 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில், இந்திய வம்சாவளியினர் வெறும் 7 முதல் 9 சதவீத சிறுபான்மையினராகவே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விவகாரம் குறித்துச் சிங்கப்பூரின் சட்ட அமைச்சரும், உள்நாட்டு துறைக்கான இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் (Edwin Tong) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

"இந்தக் காணொளிகள் எங்களின் பல்லின சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அவர்கள் நிறம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க முயல்கிறார்கள். ஆனால் இது சிங்கப்பூரின் அடையாளம் அல்ல. சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு சமூகமும் சமமாக மதிக்கப்படுகின்றது. எங்களின் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் இத்தகைய பதிவுகளை, குறிப்பாக வெளிநாட்டவர்கள் பரப்புவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது," என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இது எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பிரச்சாரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், வெளிநாட்டு நெட்டிசன்களால் இது தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது எனவம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தீவிர தேசியவாதம் மற்றும் அந்நியர் மீதான வெறுப்புப் பிரச்சாரங்களை சிங்கப்பூர் கடுமையாக எதிர்ப்பதாக உள்நாட்டு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 




குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

Published By: Digital Desk 3

11 Jun, 2026 | 09:48 AM

ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அங்கு வரவிருந்த அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று (11)வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்றையதினம் அதிகாலை 4:50 மணி முதல் இந்த வான்பரப்பு மூடல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, குவைத் வான்பரப்பிற்குள் நுழைந்த பல "பகைமைப் பொருட்களை" தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக குவைத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான 'குவைத் செய்தி முகமை' செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் வான்பரப்பில் நீண்ட நேரம் வட்டமடித்தபடி காத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்கால மோதல்களில் குவைத் சர்வதேச விமான நிலையம் நேரடியாக ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளங்களை இலக்கு வைத்து தாங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

குவைத்தில் உள்ள 'அலி அல் சலேம்' மற்றும் 'அஹ்மத் அல் ஜாபர்' ஆகிய இரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளங்கள் உட்பட பிராந்தியத்தில் உள்ள 18 முக்கிய அமெரிக்க இராணுவ இலக்குகளை இருகட்டங்களாகத் தாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அண்மையில் தென் ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை இது என ஈரான் வர்ணித்துள்ளது.   

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தற்போது குவைத், பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர்ச் சூழல் உருவாகியுள்ளது.   நன்றி வீரகேசரி 



No comments: