மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேச்சுப்போட்டி 06.06.2026 அன்று பள்ளியின் மண்டபத்தில் சிறப்பாகவும் சிறப்புமிக்க முறையிலும் நடைபெற்றது. தமிழ் மொழியின் வளத்தையும் மாணவர்களின் சிந்தனைத்திறன், ஆராயும் மனப்பாங்கு, தன்னம்பிக்கை மற்றும் மேடைப்பேச்சுத் திறன்களையும் வளர்க்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அரும்புகள் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகள் வரை பல்வேறு
பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கென வழங்கப்பட்ட தலைப்புகளில் ஆழமான சிந்தனைகளுடனும் தெளிவான கருத்துக்களுடனும் உரையாற்றினர்.
போட்டியின் போது மாணவர்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, தெளிவான உச்சரிப்பு, கருத்துக்களை ஒழுங்குபடுத்தி முன்வைக்கும் திறன் மற்றும் மேடை ஆளுமை ஆகியவை பார்வையாளர்களையும் நடுவர்களையும் பெரிதும் கவர்ந்தன. இளம் தலைமுறையினர் தமிழ் மொழியை ஆழமாகக் கற்றறிந்து அதன் வழியே தமது சிந்தனைகளை வெளிப்படுத்தும் திறனை வளர்த்து வருவதற்கான சிறந்த சான்றாக இந்நிகழ்வு அமைந்தது.
நிகழ்வில் நடுவர்களாகப் பங்கேற்ற கல்வியாளர்களும் சமூகப் பிரமுகர்களும் மாணவர்களின் உரைகளை கவனமாக மதிப்பீடு செய்து, அவர்களின் பேச்சாற்றலை பாராட்டியதோடு மேலும் முன்னேறுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினர். அவர்களின் ஊக்கமூட்டும் கருத்துக்கள் மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தன.
இந்நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த தலைவர்,
அதிபர், ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் திட்டமிடல், ஒழுங்கமைப்பு, மேடை அமைப்பு, ஒலியமைப்பு, மாணவர்களை மேடைக்கு தயார்படுத்தல், மாணவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீள அழைத்து வருதல், நேர முகாமைத்துவம், புகைப்படம் காணொளிப் பதிவு மற்றும் உரிய நேரத்திற்கு கலந்து கொண்டு அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கியமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
மேலும், பள்ளியின் ஆண்டு மலருக்கான புகைப்படப் பதிவுகளை மேற்கொண்டு, நிகழ்வின் இனிய நினைவுகளைப் பதிவு செய்வதில் உதவியவர்களுக்கும் நிகழ்வின் வெற்றிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்த அனைத்து நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் ஒத்துழைப்பும் பாராட்டப்பட்டது.
போட்டியின் இடையில் நடுவர்களாக செயற்பட்ட நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர்களுக்கு ஓர் நினைவுக்கு கேடயமும் நிர்வாகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
தங்களது பேரன், பேத்திகளின் பேச்சுகளைக் கேட்க ஆர்வத்துடன் வருகை தந்திருந்த மூத்த தலைமுறையினர், புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்து வரும் எமது தமிழ் மாணவர்கள் இவ்வளவு தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் தமிழில் உரையாற்றியதைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். நிகழ்வின் பல்வேறு தருணங்களில் ஆசிரியர்களையும் நிர்வாகத்தினரையும் அணுகி தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். புலம்பெயர் சூழலில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இம்மாணவர்கள் நம்பிக்கையூட்டும் தலைமுறையாக உருவாகி வருவதாக பலரும் பெருமிதத்துடன் கருத்து வெளியிட்டனர்.
மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அடுத்த
தலைமுறையினரிடம் வளர்க்கும் நோக்கில் மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் கல்விசார் முயற்சிகளில் இப்பேச்சுப்போட்டி மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மாணவர்களின் தமிழ் மொழி ஆளுமை வளர்ச்சிக்கும், எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பணிக்கும் இந்நிகழ்வு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வு தமிழ் மொழியின் எதிர்காலம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்ற நம்பிக்கையை அனைவரின் மனங்களிலும் மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தது.
ஆக்கம் :
கௌரீஸ்வரன் கந்தசாமி




























No comments:
Post a Comment