ஓட வருவேன் உயிரோடிணைய!



விழிகளில் நீரேந்திய கயற்கண்ணி

வழிந்தோட காத்திருக்க வருவேன்
அழியாத என் ஓவியமே என் உயிரே
வழி ஒன்று சொல்வேன் வருந்தாதே

கடல் கடந்து மட்டுமே சென்றேன்
உடல் மட்டுமே நம்மைப் பிரித்தது
மடல் வந்து நம்முள்ளம் இணைக்க
விடல் நம் அன்புக்கும் இல்லையே

வானில் மேகம் ஓடுகின்றதா அதுவும்
நானிங்கு விட்ட மேகவிடு தூதாகும்
ஏனிங்கு நான் எழிலை விட்டுவந்தேன்
மானிங்கு நீயில்லை மயங்குகின்றேன்

ஊரை விட்டு வந்தாலும் கலங்காதே
நாரைகளை வானில் கண்டால் நீயும்
நாரைவிடு தூதாக எண்ணி மகிழ்வாய்
கூரையை கோபுரமாக்க வந்ததறிவாய்

சித்திரமே செம்பவளக் கொடியே மலரே
இத்தரையில் உனைவிடில் யாரெனக்கு
தத்தை மொழியாள் உன் பேச்சை நாடி
அத்தான் ஓடிவருவேன் உயிரோடிணைய!








-சங்கர சுப்பிரமணியன்.

No comments: