எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11
ஆம் திகதி சனிக்கிழமை முதல் 15ஆம் திகதி புதன்கிழமை வரை சிட்னி முருகன் கோயில்
மண்டபத்தில் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் பண்ணிசைச் சொற்பொழிவுகளை நடாத்த
உள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகளைச் சிட்னி
முருகன் கோவில் சைவ மன்றத்தினர் சிவஞானத் தமிழ்ப் பேரவையின் உதவியுடன் செய்து வருகின்றார்கள்.
சுவாமிகள் கிராமங்கள் முதல்
பெரு நகரங்கள் வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் திருமுறைகளைப் பரப்புவதையே தன்
கடமையாகக் கருதிச் செயற்பட்டு வருகின்றார்.
இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, மொரிசியசு போன்ற பல
நாடுகளுக்கும் சென்று அங்கும் திருமுறைகளப் பரப்பி வருகின்றார். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் சுவாமிகள்
அவுத்திரேலியாவுக்கு வருவதற்குத் திருவருள் கைகூடியுள்ளது.
செல்லும் இடமெல்லாம்
ஓய்வின்றிச் சுவாமிகள் தனக்கெனப் பயனேதுங் கருதாமல் திருமுறைப் பண்ணிசை
நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.
பணத்தையோ புகழையோ பெரிதாகக் கருதாமல் பாடும் பணியே பணியாய்ச் செய்து
வருகின்றார். தனக்குக் கிடைக்கும் சொற்ப
தட்சணைகளைக் கூட வசதியற்ற கோயில்களில் விளக்கேற்றவும் ஏழை எளிய மக்களுக்கு உணவும்
உடையும் வழங்கவும் செலவிட்டு வருகின்றார்கள். சுவாமிகள் துறவறத்தை மனம், மெய், மொழிகளால்
முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்,
திருக்கயிலாய கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்ற ஆதீனத்தை நிறுவி அதன்
தலைவராகச் செயற்பட்டு வருகின்றார்.
திருமுறைகள் சைவத்
தமிழருக்குக் கிடைத்துள்ள பெருங்கருவூலம்.
அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. பல
தேவாரப் பதிகங்களைப் பாடித்தான் மூவர் முதலிகள் பல அற்புதங்களை
நிகழ்த்தினார்கள். நம்பிக்கையோடும்
பக்தியோடும் திருமுறைகளைப் பாடும் அடியவர்களின் வாழ்வில் இன்றும பல அற்புதங்கள்
நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
எமது அன்றாட வாழ்விலே
திருமுறைகள் எந்த வகையில் எமக்கு உதவும் என்று சுவாமிகள் இந்தப் பண்ணிசைச்
சொற்பொழிவுத் தொடரிலே விரிவாகச் சொல்ல இருக்கின்றார். அந்த வகையிலே இத்தொடர் உங்கள் வாழ்விலே ஒரு
மேன்மையைத் தந்து உங்களை நன்னெறிப்படுத்தும்.
எனவே இந்த அரிய வாய்ப்பைப்
பயன்படுத்தி சுவாமிகளின் திருவாயால் மலர இருக்கும் இச்சொற்பொழிவுகளைக் கேட்டு உய்ய
வருமாறு உங்களை சைவமன்றத்தினர் அன்போடு அழைக்கின்றார்கள்.
மெல்பர்ன்
நகரிலும் 17 – 19 ஏப்ரல் 2026 (மூன்று தினங்கள்) ஆகிய நாள்களில் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் வழங்கும் பண்ணிசைச் சொற்பொழிவுத் தொடர்
நிகழ்ச்சி
நடைபெற உள்ளது.
இது பற்றிய அறிவித்தல் தனியாக வெளியிடப்படும்.


No comments:
Post a Comment