குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பதாகவே ஆரவாரப்படத் தொடங்கிவிட்டார்கள். அந்த விடுமுறையில், பிள்ளைகள் மூவரும் தாங்கள் போக விரும்பிய இடங்களைக் குறிப்பிட்டு, அங்கே என்னவெல்லாம் பார்க்கலாம் என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் சொல்லும் இடத்துக்குத்தான் போகவேண்டும் என்றும் அடம் பிடித்தார்கள்.
கடைசியில் இவாஞ்சலினாவும் டேவிட்டும் எல்லாரையும் சமாதானம் செய்து, `பேர்த்’ என்ற இடத்திற்கு ஒரு கிழமை போய்வர முடிவெடுத்துக் கொண்டார்கள்.
மெல்பேர்ணில் இருந்து பேர்த் போவதற்கு மூன்றரை மணி நேரம் ஆகாயத்தில் பறக்க வேண்டும். பண்டிகைக்காலம், திடீர்ப்பயணம் என்பதால் செலவு எல்லாம் கூடியே இருந்தது. அப்பா டேவிட் கொம்பியூட்டரில் ஒன்லைனில் விமானச் சீட்டுகள், தங்குமிட வசதிகளைத் தேடி மும்மரமாக மூழ்கி இருந்தார்.
வருடத்தில் ஒருமுறை வரும் அந்தப் பண்டிகைக்கால விடுமுறையில்தான் அனேகமாக எல்லாருக்கும் லீவு கிடைக்கும். சேர்ந்து கொண்டாடுவார்கள்.
“அம்மம்மா… நாங்கள் எல்லாரும் பேர்த் போறோம். நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை இந்த பாக்கிற்குள் அடுக்கி வையுங்கள்” கடைக்குட்டிப் பேத்தி தன்னைவிட பெரிய பாக் ஒன்றை இழுத்துக் கொண்டுவந்து அம்மம்மாவின் காலடியில் போட்டாள். அம்மம்மா அடியும் நுனியும் புரியாமல் விழித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் எல்லாரும் எங்குமே ஒன்றாகப் பயணித்ததில்லை. அம்மம்மாவும் அம்மப்பாவும் மூப்பு காரணமாக அதற்குத் தடையாக இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு இவாஞ்சலினாவும் டேவிட்டும் எங்குமே நகர முடியாதவர்களாக இருந்தார்கள்.
இன்று அம்மப்பா வைத்தியசாலையில் பாலியேட்டிவ் கேரில் (Palliative Care) இருக்கின்றார். குணப்படுத்த முடியாத குடல் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் தான் எண்பத்தைந்து வயதுகளைப் பூர்த்தி செய்து கொண்டார். அந்தச் சிறப்பு மருத்துவப் பகுதியில் அவருக்கு வலியைக் குறைக்கும் சிகிச்சை வழங்குகின்றார்கள்.
அம்மம்மா கட்டிலில் இருந்து இறங்கி, ஊன்றுகோலையும் எடுத்துக் கொண்டு, பேர்த்தி போன பாதை வழியே சென்றார்.
“என்ன
இவள் சொல்லுகின்றாள்?” என்று இவாஞ்சலினாவைப் பார்த்துக் கேட்டார்.
“நெடுகலும் நீங்களும் வீட்டுக்கை அடைஞ்சு இருக்கிறியள். பிள்ளையளுக்கும் ஒரு அவுற்றிங் ஆக இருக்கும். இந்த முறை ஈஸ்டர் விடுமுறைக்கு பேர்த் போய் வருவோம்.”
கணவர் வைத்திய சாலையில் தஞ்சம் புகுந்ததன் பின்னர், அம்மம்மாவுக்கு பயணங்களில் பெரிதும் நாட்டமிருக்கவில்லை. தனக்குத்தானே உணவு செய்து, தன்னைத் தானே பார்த்து வரும் அவருக்கு, கணவனை விட்டு எங்கும் போவதில் பிரியமில்லை.
“நான் வரவில்லை. நீங்கள் மாத்திரம் போய் வாருங்கள்.” என்றார் அம்மம்மா.
அம்மம்மா தன்னைத்தானே கவனித்துக் கொள்பவராக இருந்தாலும், அவரைத் தனியே விட்டுவிட்டு எங்கும் போகமுடியாது. அவரையும் சேர்த்துக் கொண்டு பயணிப்பதாயின், அம்மம்மாவுக்கு அவற்றில் நாட்டமில்லை.
இவாஞ்சலினா அம்மாவின் பதிலைக் கேட்டு சங்கடத்துக்குள்ளானாள்.
அன்று இரவு இவாஞ்சலினாவும் டேவிட்டும் தங்களுக்குள் நீண்ட நேரம் உரையாடினார்கள்.
அம்மம்மாவை பத்து நாட்கள் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, பேர்த் போய் வரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டார்கள்.
இவாஞ்சலினாவின்
அப்பா இருந்த மருத்துவமனையில், ஈஸ்டர் விடுமுறை தொடர்பாக, நிர்வாகம் ஒரு கூட்டத்தை
ஒழுங்கு செய்திருந்தது. பாலியேட்டிவ் கேரில் இருக்கும் நோயாளர்களில், தீவிர
சிகிச்சை தேவைப்படாத ஒரு சிலரை
விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்களின் வீட்டிற்கு அனுப்புவது பற்றி அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
அதனடிப்படையில் இவாஞ்சலினாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வைத்தியசாலையில் இருந்து வந்தது.
“ஒரு நற்செய்தி. இந்த வருட ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, உங்கள் அப்பா ஒரு வாரம் உங்களுடன் இருக்க விரும்புகின்றார். அவரை வந்து அழைத்துச் செல்லுங்கள். அவருடன் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தை அனுபவிக்க எமது வாழ்த்துகள். அவர் உங்களுடன் இருக்கும் காலங்களில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.”
இவாஞ்சலினாவிற்கு அந்தத் தொலைபேசி அழைப்பு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
எது கொண்டாட்டம்? காசைச் செலவழித்து, ஒரு புது இடத்தைப் போய் பார்த்து வருவதா? அல்லது சுற்றம் சூழ குடும்பத்தினருடன் வீட்டுக்குள் இருந்தபடியே நேரத்தைச் செலவிடுவதா?
இவாஞ்சலினா குழம்பிப் போனாள்.
மாலை அம்மப்பா வீட்டுக்கு வந்தார். அம்மம்மாவின் காதுக்கு அவரின் வருகை எட்டியது. அவர் கட்டிலில் இருந்து குதித்து இறங்கி, தனது கணவரைக் காண்பதற்காக் விரைந்து நடந்து போனார்.
“எங்கை அம்மம்மா உங்கட வாக்கிங் ஸ்டிக்?” என்று பேரன் கத்தினான். அவர் பேரனின் கூக்குரலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அம்மப்பாவைக் சுட்டிக்காட்டி, “அவர்தானே வந்திட்டார். இனி அது எனக்கு எதுக்கு?” என்றபடி தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தார். தனது கணவரின் கைகளைப் பற்றிப் பிடித்தபடி, தனது அறை நோக்கி மெதுவாக அவரைக் கூட்டிச் சென்றார்.
அவருக்குச் சொல்வதற்கு அம்மம்மாவிடம் ஆயிரம் கதைகள் இருந்தன.
பேரப்பிள்ளைகள் மூவரும் தமக்குக் கிடைத்த ஈஸ்டர் பரிசுப்பொருட்களுடன் அம்மம்மாவையும் அம்மப்பாவையும் சூழ்ந்து கொண்டார்கள். ஐந்து குழந்தைகளின் சிரிப்பொலி அந்த அறையை நிறைத்தது.

No comments:
Post a Comment