இமில் தழுவி நின்றாடிய இனமென அறிக! - சங்கர சுப்பிரமணியன்.


எத்தனை துயரங்கள் எத்தனை வரினும்
எத்தனை வடிவங்களில் வந்து நிற்பினும்
அத்தனையும் வந்தும் அவற்றை மறந்திட
இத்தரை வாழ்வு இனிமையாய் உள்ளதே

என்னவென்று நான் எண்ணிய பொழுதில்
உன்னதமான உயர்தனிச் செம்மொழியாம்
என்னினத்தின் தாய்மொழியென அறிந்தே
தன்மானமாய் தலைநிமிரவும் வைத்திடுதே

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்றான்
இனிய கருத்தை இயம்பினான் வள்ளுவன்
இனியும் நம்மாந்தரில் ஏனிங்கே சிலரும்
கனியிருப்பக் காய்கவர்ந்து மகிழ்கிறாரே

நெஞ்சினில் நம்மினமெனுத் நினைவு எழ
வஞ்சக எண்ணம் வந்தவழியிலே ஓடிடுமே
தஞ்சமென்றனைவர் தழைத்திட அருளிட
கொஞ்சமும் எண்ணா பெருமை உளதோ

தமிழனென்று சொல்லி தலை நிமிர்ந்திடா
உமியென வாழ ஒரு நொடியும் விரும்பேன்
அமிழ்தினும் இனிய தமிழ் வழிவந்தவனாய்
இமில் தழுவி நின்ற இனமென அறிவேன்!

-சங்கர சுப்பிரமணியன்.

 


No comments: