விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 8…..சங்கர சுப்பிரமணியன்.

 சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!


இப்படி நிறுவிய டோரிகேட் ஒவ்வொன்றிலும் அதை வழங்கியவர்களைப் பற்றிய விபரங்கள் இருக்கும். நம் ஊரிலும் இதைப் போன்று காணிக்கையா வழங்கியவற்றைக் காணலாம். சில ஆலயங்களில் காணிக்கையாக கொடுக்கும் பொருட்களில் கொடுப்பவர்களின் பெயர், ஊர் போன்ற  விபரத்தை எழுதி இருப்பதை கண்டிருப்போம். சான்றாக குழல் விளக்கை அன்பளிப்பு செய்திருப்பவர்கள் அதில் விளக்கின் வெளிச்சமே தெரியாதபடி தம்மைப்பற்றி விளம்பரப்படுத்தி இருப்பார்கள்.

திரும்பவும் டோரிகேட்டுக்கு வருகிறேன். கியோட்டாவிலுள்ள பியூசிமி

இனாரி டெய்ஷாவிலுள்ள காணிக்கையாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான டோரி கேட்டுகள் மலையேறுவதற்கு வழியாக படிகளுடன் அமைக்கப் பட்டுள்ளன. நெருக்கமாக ஒன்றையடுத்து ஒன்றாக அமைக்கப் பட்டிருப்பதால் குகைபோன்ற தோற்றத்தை கொடுக்கும்.

இப்படி குகை போன்று அமைக்கப் பட்டிருக்கும் வழி ஏறுவதற்கு வலது புறமாகவும் இறங்குவதற்கு இடது புறமாகவும் இருக்கும். அருகருகே அமைக்கப் பட்டிருக்கும் இதற்கு சென்பன் டோரி என்று பெயர். இதற்கு ஆயிரம் டோரி கேட்டுகள் என்று பொருள் என்றாலும் இந்த வழியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டோரி கேட்டுகள் உள்ளன.

நம் கோவில்களில் அர்ச்சனை நடப்பது போல் இங்கும் ஒரு நூதன முறை உள்ளது. இங்கு பல அர்ச்சனைகள் பணத்திற்கு ஏற்ப நடப்பதுபோல் அங்கும் நடக்கிறது. இதை சற்று விரிவாகப் பார்ப்போம். செதுக்கப்பட்ட மரக்கட்டைகள் பல அளவுகளில் உள்ளன.
இவை ஒவ்வொன்றுக்கும் 500 யென் 1000 மற்றும் 2000 யென் வரை விலை.


இதில் ஒரு கட்டையை தேர்வு செய்து அதில் நம் விருப்பத்ததை எழுத வேண்டும். விருப்பத்தை உங்கள் விருப்பம் போல் எழுத முடியாது. அங்கு ஒரு அட்டவணை உள்ளது. அதில் பல வாசகங்கள் உள்ளன.அதில் ஒன்றை உங்கள் விருப்பமாக நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்த வாசகத்தை அந்த கட்டையில் எழுதி வைக்க வேண்டும்.

காசுக்கு ஏற்ற தோசை என்பதுபோல் வாசகங்களுக்கு ஏற்ப பணம் கொடுத்து அதற்குண்டான கட்டையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். எழுதிய கட்டையை அதற்கென குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். பின் இப்படி எழுதி வைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட  கட்டைகள் அனைத்தையும் ஆண்டு தோறும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும் தீ திருவிழாவில் தீயிலிட்டு எரிக்கிறார்கள்.

எப்படியோ இயற்கையோடு சம்பந்தப்பட்ட தீ  இயற்கை வழிபாட்டை நினைவூட்டுகிறது அல்லவா? நம் நாட்டில் கார்த்திகை தீபம், போகிப் பண்டிகை, தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்தல், தீப ஆராதனை, மகரவிளக்கு, அண்ணாமலை தீபம், மற்றும் தீபாவளி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி விருப்பத்தை எழுதிய கட்டைகளை சடங்கு முறையில் எரிப்பதன் மூலம் அவர்களின் கோரிக்கைகள் ஜப்பான் முழுவதுமிருந்து நேராக சொர்க்கத்துக்கு செல்கிறது. இப்படி வேண்டுதல் கட்டைகளை எரிக்கும் பழக்கம் புத்தமதம் ஜப்பானுக்குள் நுழைந்ததில் இருந்துதான் தொடங்கியுள்ளது.

ஷிண்டோ மத வழக்கப்படி தீ புனிதமாக கருதப்படுகிறது. இலையுதிர் காலத்தில் அறுவடையைத் தொடர்ந்து அறுவடைக்கான இனாரி குளிர் காலத்துக்கு  மலைக்கு திரும்புமுன் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தீயைக் கொளுத்தி கொண்டாடும் திருவிழா. இவ்விழா மலைக்கு இனாரியை அனுப்பவதற்கு பதிலாக கட்டைகளை எரித்து சொர்க்கத்துக்கு அனுப்புவதாக மாற்றப் பட்டுள்ளது.

இப்போது நீங்கள் எல்லா புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும். யாகம் நடத்துவதற்கே எதிர்ப்பைத் தெரிவித்த புத்தர் தோற்றுவித்த புத்தமதம் மகாயானம் ஹீனயானம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின் மகாயானம் சீனா மற்றும் கொரியாவுக்கு பரவி அங்கிருந்து ஜப்பானுக்குள்ளும் நுழைந்தது.

ஜப்பானுக்குள் நுழைந்த மகாயானம் ஜப்பானிய பழங்குடி மதமான இயற்கை வழிபாட்டுடன் கலந்து சடங்கு சம்பிரதாயம் சொர்க்கம் மற்றும் உருவவழிபாடு போன்றவற்றால் இணைந்தது. ஆனால் ஜப்பானியர் இதிலெல்லாம் நாட்டம் கொள்வதில்லை. அவர்களின் மந்திரமே வேறு உழைப்பு, உழைப்பு மற்றும் முன்னேற்றம், முன்னேற்றமே.

அதனால்தான் மதத்தையே வாழ்வாக கொண்டு வாழும் நாடுகள் எல்லாம் பின் தங்கியுள்ளன. மதம் எதற்கு? மனசாட்சியுடன் தவறிழைக்காது ஒழுக்கமாக உழைத்து வாழ்வதே அறம். பின்எதற்கு மதம்? செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமக்கு செல்வம். செல்வம்தான் மதம். ஆதலால் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்றான் வள்ளுவன்.

உடனே அருளில்லார்க்கு அவ்வுலகில்லை என்று சொல்லியிருக்காரே என்று மாடசாமி அண்ணாச்சி இல்லாத சொர்க்கத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். அருள் இரக்கம், அன்பு போன்றவையாகும். இரக்கம் இல்லாதவர்களுக்கு இரக்கம் இருக்கும் இடத்தில் என்ன வேலை என்பதே பொருள்.
அவற்றையெல்லாம் தானாகவே மனிதன் கடைப் பிடிக்கும்போது பாவம், புண்ணியம், சொர்க்கம் நரகம் எல்லாம் அடிபட்டு வாழும் இடமே சொர்க்கமாகிறது.

ஜப்பானிலுள்ள பாரம்பரிய மிக்க ஷிண்டடோ மதமுறையிலுள்ள வழிபடுதளங்களில் புத்தமத கோட்பாடுகளும் புத்த வழிபடுமிடங்களில் ஷிண்டோ மதசம்பந்தமான முறைகளும் இணைந்து பாகுபாடு காணமுடியா அளவுக்கு கலந்துள்ளது. இதுதான் மத நல்லிணக்கத்துக்கு தக்க சான்றாகும்.

இப்படியில்லாமல் தனித்தனியாக அந்தந்த மதக் கட்டுப்பாட்டுடன் வழிபடு தளங்களை அமைத்துவிட்டு நல்லிணக்கம் பேசினால் அதை நல்லிணக்கம் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா? புத்த கோவிலில் கிட்சியூனும் இனாரியில் புத்த கோட்பாடுகள் இருப்பதைப்போல சிவன் கோவிலில் துளசியும் விஷ்ணு கோவிலில் வில்வமும் பிரசாதமும் கொடுப்பார்களா?

யானைக்கே மாற்றி மாற்றி நாமத்தைப் போட்ட நமது மத நல்லிணக்கம் ஏட்டுச் சுரைக்காய்தான் என்பது நன்றாக தெரிகிறது அல்லவா? இதுவெல்லலாம் பெரிய இடத்து விவகாரம். நாம் நம் கட்டுரையைப் பார்ப்போம். இயற்கை எழில் கொஞ்சும் இனாரியை விட்டுப் பிரிய மனம் வரவில்லை.

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு, கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு என்று நடிகர் விஜய் நடிகை காஜல் அகர்வாலுடன் ஜில்லா படத்துக்காக
இந்த டோரி கேட்டில்  பாடி ஆடியது நினைவுக்கு வந்தது. தமிழக முதல்வராக வருவார் என்று அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மற்ற இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டியிருப்பதால் பியூஷிமி இனாரி டெய்ஷாவிலிருந்து விடைபெற்றோம்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: