முறியடிக்கப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்தம்: லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேலும் ஊடுருவ நெதன்யாகு அவசர உத்தரவு!
ஈரானை நோக்கிச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
முறியடிக்கப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்தம்: லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
Published By: Digital Desk 2
04 Jun, 2026 | 01:10 PM
இஸ்ரேல் மற்றும் லெபனான் தங்களின் நிலையற்ற போர் நிறுத்தத்தை புதுப்பிக்கவும், லெபனானுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்குத் தடை விதிக்க பல முன்னோட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்ட பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிநேர போர் நிறுத்தத்தைச் சோதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசியதற்கு பிறகு குறித்த இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், தெற்கு லெபனானில் லிட்டானி நதியிலிருந்து எல்லை வரை இஸ்ரேல் கட்டுப்படுத்தும் பகுதியிலிருந்து "அனைத்து இயக்கத்தினரையும் வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது.
"அனைத்து அரசு சாரா அமைப்புகளையும் தவிர்த்து, லெபனான் ஆயுதப் படைகள் அப்பகுதியின் மீது பிரத்யேகக் கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கு அமெரிக்கா வழிகாட்டும் என குறித்த ஒப்பந்தத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
லெபனானில் எட்டப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்த உடன்படிக்கை இருதரப்புத் தாக்குதல்களால் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியில், விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையானது ஹிஸ்புல்லா அமைப்பின் தலையீடற்ற, லெபனானின் பாதுகாப்பிற்கான ஒரு பிரத்யேகச் செயல் திட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிப்பு குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, திங்கட்கிழமை எட்டப்பட்ட பகுதிநேர உடன்படிக்கையின்படி, ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத பட்சத்தில், தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தாது என லெபனான் அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் இதற்கு ஹிஸ்புல்லா அனுமதி அளித்துள்ளதாகவும் அரசு கூறியிருந்தது.
ஆனால், லெபனான் அரசின் இந்தக் கூற்றை ஹிஸ்புல்லாவின் அரசியல் குழு உறுப்பினர் மஹ்மூத் கமாட்டி முற்றாக மறுத்துள்ளார்.
"அங்கு எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான 'தாஹியே' மாவட்டத்திற்கான தற்காலிகப் பாதுகாப்பு மட்டுமே பேசப்பட்டது."என மஹ்மூத் கமாட்டி, தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, எல்லையைத் தாண்டி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தினால் பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்போம் என இஸ்ரேலியத் தலைவர்கள் எச்சரித்திருந்தனர். அதற்கமைய, புதன்கிழமையன்று இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பகுதிநேரப் போர்நிறுத்தத்தை முறியடித்துள்ளன.
எல்லையைக் கடந்து வந்த ஹிஸ்புல்லாவின் ட்ரோன் மற்றும் இரண்டு ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டிருந்த பகுதியை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டுமே மத்திய கிழக்கின் இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முழுமையான அமைதி ஒப்பந்தமாக மாறுமா என்பது தெரியவரும் என சர்வதேச இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நன்றி வீரகேசரி
போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேலும் ஊடுருவ நெதன்யாகு அவசர உத்தரவு!
Published By: Digital Desk 3
01 Jun, 2026 | 10:16 AM
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் படைகளுக்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் இருதரப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் இந்த அதிரடித் தாக்குதல் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தப் போர் தீவிரமடைந்தது.
இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவல்களால் லெபனானில் இதுவரை 3,370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 24 படையினரும் 4 பிரதானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானில் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல், இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
லெபனானில் அதிகரித்து வரும் இந்த மிக மோசமான வன்முறைச் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, இன்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதே தங்களது நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.தெற்கு லெபனானில் உள்ள மிக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, 900 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையையும் அதன் மலைத்தொடரையும் இஸ்ரேலியப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.
கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின்னர் இஸ்ரேல் இக்கோட்டையிலிருந்து வெளியேறியிருந்தது. தற்போது 26 வருடங்களின் பின்னர் மீண்டும் இக்கோட்டையில் இஸ்ரேலியக் கொடியும், கோலானி பிரிகேட் இராணுவக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, லிடானி ஆறு வரை ஏற்கனவே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவம், தற்போது அதற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாரானி ஆற்றை நோக்கிப் படை நகர்த்தலை மேற்கொண்டு வருகிறது. சஹாரானி பகுதிக்கு தெற்கே உள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இருநாடுகளின் பாதுகாப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போர்நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
வான் பாதுகாப்பு அமைப்புகளால் எளிதில் கண்டறிய முடியாத, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஹிஸ்புல்லாவின் 'காமிகாசி' தற்கொலைத் ட்ரோன் தாக்குதல்களால் இஸ்ரேலியப் படைகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இத்தாக்குதல்களில் பல இஸ்ரேலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும், "ஹிஸ்புல்லாவின் பலத்தை முழுமையாக நசுக்கும் வரை எங்களது இராணுவப் பிரசாரம் ஓயாது" என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஈரானை நோக்கிச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
Published By: Digital Desk 3
03 Jun, 2026 | 10:25 AM
ஈரானை தமக்குச் சாதகமான நிபந்தனைகளின் கீழ் அமைதி ஒப்பந்தமொன்றிற்கு வருமாறு வற்புறுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான பொருளாதார மற்றும் இராணுவ முற்றுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரம்மாண்ட எண்ணெய் வாக்னிக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் 'ஹெல்ஃபயர்' ஏவுகணைத் தாக்குதலை நடத்திக் கப்பலைச் செயலிழக்கச் செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (02) அரங்கேறியுள்ள இந்த அதிரடி ஏவுகணைத் தாக்குதலானது, மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான உத்தியோகபூர்வ காணொளி காட்சிகளை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்டுள்ளது.
போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் பயணித்த M/T Lexie என்ற எண்ணெய் வாக்னிக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இக்கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் குழுவினர், கடந்த 24 மணித்தியாலங்களாக அமெரிக்கப் படைகளினால் விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பலமுறை முற்றாக நிராகரித்து அத்துமீறிப் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக, அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று இறுதியாக அந்தக் கப்பலின் என்ஜின் அறையைக் குறிவைத்து 'ஹெல்ஃபயர்' ஏவுகணையைச் செலுத்தியுள்ளது. இந்தத் துல்லியமான தாக்குதலின் மூலம் கப்பலின் என்ஜின் பகுதி பலத்த சேதமடைந்து கப்பல் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், அது ஈரானைச் சென்றடைவதும் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் ஈரான் மீதான இந்த இராணுவ முற்றுகை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் தற்போது வரை அமெரிக்க இராணுவத்தினால் பலவந்தமாகச் செயலிழக்கச் செய்யப்பட்ட ஆறாவது கப்பல் இந்த 'லெக்ஸி' ஆகும். இது தவிர, ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய முயன்ற அல்லது அங்கிருந்து வெளியேற முயன்ற சுமார் 122 கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தி, வேறு திசைகளுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் கப்பல்கள் மீதான கடுமையான தடைகள் காரணமாக, சர்வதேசக் கடல் வணிகப் பாதையில் பெரும் அச்சுறுத்தலும் பொருளாதாரப் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் விமரிசகர்கள் எச்சரித்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment