பொப் இசையின் மன்னன் என்று கோலோச்சிய மைக்கேல்
ஜாக்சனின் சுயவரலாற்றுத் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் வாழும் உலகம் வேறு, தான் வாழும் உலகம் வேறு. மைக்கேல் ஜாக்சனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது அவரது சுயவரலாறு தாங்கிய Michael வெளி வந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் ஒரு இசைக் கலைஞன் தன் முன் எதிர்ப்படும் சவால்களை எல்லாம் முட்டி மோதிக் கடந்து சாதிப்பது போல ஏராளம் படங்களைக் கண்டிருப்போம்.
இங்கே நம் முன்னே வாழ்ந்து மடிந்த, இசையுலக சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய நாயகனின் கதையாக அது விரிகின்றது.
இந்திய சினிமாவுக்கே உரித்தான நாயக அறிமுகம் கூட இங்கே நிகழ்த்தப்படுகிறது, மெல்ல மெல்ல அது அவனின் பால்யகாலம் நோக்கி நகர்த்தப்படுகிறது,
சார்லி சாப்ளின் படங்கள், Peter Pan கதைப் புத்தகங்கள் என்று சின்னச் சின்ன ஆசைகளோடு வாழும் அந்த இசைப் பேரரசனுக்கு செல்லப் பிராணிகளாக, குரங்குக் குட்டி, மலைப்பாம்பு, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம் என்று காட்டப்படும் போது நெகிழ்வும், சிரிப்பும் எழுகிறது. அதே சமயம் புகழ் என்ற மாய உலகில் அந்தக் கலைஞனின் அவதியை இன்னொரு பக்கம் காட்ட முனைகிறது திரைப்படம்.
மைக்கேல் ஜாக்சனின் இன்னொரு முகம் மனித நேயம், அது படத்தில் சில காட்சிகளின் வழியே வெளிப்படுகின்றது.
அதன் பின்னணி இதுதான்.
1999 ஆம் ஆண்டில் MJ & Friends என்ற இசை நிகழ்வு கொசோவோ நாட்டுச் சிறுவர் நலனுக்காக நிகழ்த்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் “ஏகம் சத்யம்” என்றதொரு இசைப் பாடலை அரங்கேற்றினார். ஆனால் மைக்கேல் ஜாக்சனுடனான நேரடிச் சந்திப்பு Slumdog Millionaire இற்காக ஆஸ்கார் பெற்றதன் பின்னரே நிகழ்ந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், பாப் இசையின் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்குமான கடைசி உரையாடலில் மைக்கேல் ஜாக்சன் ரஹ்மானிடம் வேண்டிக் கொண்டது,
“We are the world” பாணியில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவோம் என்று.
அதை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் எதிர்வரப் போகும் ஆல்பத்துக்கான ஒத்திகைகளிலும் அவர் இறங்கிவிட்டார்.
திடீரென்று வந்த அதிர்ச்சிச் செய்தியாக, மைக்கேல் ஜாக்சனின் அகால மரணம் தன்னை வேதனையுறச் செய்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் இரங்கலை வெளிப்படுத்தியிருந்தார்.
இயக்குநர் ஷங்கர் வேண்டுகோளில் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பாட வைக்க அணுகிய போதும் ரஹ்மானின் வேண்டுகோளை மைக்கேல் ஜாக்சன் ஏற்றிருந்தாராம்.
எதியோப்பியா நாடு எதிர் நோக்கிய கடும் பஞ்சத்தைப் போக்க “We are the world” என்ற இசை ஆல்பம் உருவாக்கத்தில் மைக்கேல் ஜாக்சன் , சக இசைக் கலைஞர் லயனல் ரிச்சி உடன் பாடல் உருவாக்கத்தில் தன் பங்களிப்பை வழங்கியவர். அந்த ஆல்பம் அந்தக் காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் சில வருடங்களுக்கு முன்னர் அளித்திருந்தார்.
பின்னாளில் The Wonderment Tour என்று ரஹ்மான் இசைப் பயணம் நிகழ்த்திய போது, மைக்கேல் ஜாக்சனின் This Is It ஆவணப்படத்தை இயக்கியிருந்த Kenny Ortega இந்த Wonderment என்ற சொற்பிரயோகம் மைக்கேல் ஜாக்சனுக்குப் பிடித்தமானதொன்று என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினாராம்.
இந்தியத் திரையிசையின் போக்கில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரவால் நிகழ்ந்த புத்திசையின் புதுப் பாய்ச்சல் ஒரு புறம், நடனப் புயல் பிரபுதேவா வின் வரவு நிகழ்த்திய நடன உத்தி என்று மைக்கேல் ஜாக்சனின் பிரதிபிம்பங்கள் போல இந்திய இசை உலகில் இரு பெரும் ஆளுமைகள் வெளிவந்தது காலம் எழுதிய தீர்ப்பு.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபுதேவாவை அடையாளப்படுத்தும் அளவுக்கு அது பலப்பட்டது.
இந்த மைக்கேல் ஜாக்சனின் படத்தைப் பார்த்த போது, பின்னணி இசையில் ரஹ்மானின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றியது. அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஆத்மார்த்தமாகவும் அமைந்திருக்கும்.
மைக்கேல் ஜாக்சன் கதை இன்னொரு பாகமாக வரவிருக்கிறதாம்.
அப்படியே மைக்கேல் ஜாக்சனாகப் பிறந்திருக்கிறார் Jaafar Jackson.
இவர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் Jermaine Jackson மகன். இந்தப் படத்தில் மெச்சத்தக்க விடயம் என்றால் இந்தப் பாத்திரத் தேர்வு தான். மைக்கேல் ஜாக்சனின் அந்தத் தினுசான குணாம்சத்தை அப்படியே பிறப்பெடுத்தது போலப் பிரதிபலிக்கிறார்.
இது மைக்கேல் ஜாக்சன் குறித்த ஆவணப்படமா இல்லை அவரின் சுய வரலாற்றுப் படமா என்பதில் ஏகப்பட்ட குழப்பம் நிகழ்கிறது.
தந்தை மகன் மோதல் என்பது அவரின் வாழ்வியலில் முக்கிய பங்காக இருந்தாலும் இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்ற இசை ஆளுமையின் பிறப்பெடுத்தல் இன்னும் ஆழ அகலமான திரைக்கதை அமைப்போடு வெளிப்பட்டிருக்கலாம்.
சிறுவன் மைக்கேல் ஆக நடித்த பையனின் நடிப்பும், அவனின் தேடலும் சிறப்பான காட்சிகளாக அமைந்திருக்கின்றன.
இதற்கு முன்னர் வெளிவந்த சுய வரலாற்றுப் படங்களில் இருக்கும் உணர்வோட்டம் இல்லாத வெறுமை தென்படுகிறது.
படம் பார்த்து முடித்த பின்னரும் மனதில் தேங்கி நிற்பது, தனக்காக ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பி வாழ்ந்த ஜாக்சன் தான். அவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
கானா பிரபா
26.04.2026
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment