உலகச் செய்திகள்

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

அமெரிக்க கடற்படைச் செயலாளர் திடீர் பதவி விலகல்

விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 08 பெண்களை விடுவிக்குமாறு ஈரானுக்கு ட்ரம்ப் வலியுறுத்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் : வாக்குப்பதிவில் புதிய சாதனை

அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் விருத்தில் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றம் 


இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

Published By: Vishnu

24 Apr, 2026 | 05:41 AM

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

வியாழக்கிழமை (23) அன்று அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள் போர் நிறுத்தம், அடுத்த திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதைத் தொடர முடிந்துள்ளது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்க கடற்படைச் செயலாளர் திடீர் பதவி விலகல்

Published By: Digital Desk 3

23 Apr, 2026 | 10:43 AM

 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரான் மீதான போர் மற்றும் கடல்வழி முற்றுகை தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

பீலனின் விலகல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, கடற்படை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஹங் காவோ தற்காலிகச் செயலாளராகப் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான ஜோன் ஃபீலன், ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரும் நிதி வழங்கியவர். இராணுவ அனுபவம் இல்லாத போதிலும் கடந்த 2025-ல் இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.

ட்ரம்ப் அறிவித்த "கோல்டன் ஃபிளீட்" என்ற அதிநவீன போர்க்கப்பல் வரிசையை உருவாக்குவதில் ஏற்பட்ட சுணக்கமே இவரது பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பொறுப்பேற்ற பிறகு, ராணுவத்தின் உயர்மட்டப் பதவிகளில் இருந்த டஜன் கணக்கான அதிகாரிகளை அதிரடியாக நீக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஜான் ஃபீலனும் இணைந்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு 

Published By: Digital Desk 3

22 Apr, 2026 | 08:42 AM

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களினால் உலகளவில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ளன. சாதாரண பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளின் விலை கடந்த ஆண்டை விட சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டென்னியோ' நிறுவனத்தின் அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

போரினால் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது.

ஒரு பீப்பாய் விமான எரிபொருள் விலை 90 அமெரிக்க டொலரிலிருந்து 200 டொலர் வரை அதிகரித்துள்ளது. 

வளைகுடா நாடுகளின் விமானச் சேவைகள் முடங்கியுள்ளதால், நீண்ட தூரப் பயணங்களுக்கான விமான இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு அதிகரித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா இடையிலான பயணங்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று புதன்கிழமையுடன் முடிவடைய இருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை, ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.   

"ஒப்பந்தம் எட்டப்பட அதிக நேரமில்லை; ஈரான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 08 பெண்களை விடுவிக்குமாறு ஈரானுக்கு ட்ரம்ப் வலியுறுத்து! 

Published By: Digital Desk 3

22 Apr, 2026 | 09:46 AM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் 8 ஈரானியப் பெண்களை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப்,

"எனது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஈரானியத் தலைவர்களே, அந்த எட்டுப் பெண்களை விடுவித்தால் நான் பெரிதும் பாராட்டுவேன். அவர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காதீர்கள். இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்," என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய நீதித்துறை 8 பெண்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்தத் தலையீட்டை மேற்கொண்டுள்ளார். அந்தப் பெண்களின் அடையாளம் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனினும், ட்ரம்ப்பின் இந்தப் பகிரங்க கோரிக்கை, வரவிருக்கும் பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் விவகாரத்தை ஒரு முக்கியப் புள்ளியாக மாற்றியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சிஎன்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இரண்டு முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்:

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா "மிக மிக வலிமையான" நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காகத் தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவை அவர் இஸ்லாமாபத்திற்கு அனுப்பியுள்ளார்.

இன்று புதன்கிழமையுடன் (ஏப் 22) தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், அதற்குள் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது "ஏராளமான குண்டுகள்" வீசப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், ட்ரம்ப்பின் இந்த "அமைதி மற்றும் அச்சுறுத்தல்" கலந்த அணுகுமுறை சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 





தமிழக சட்டமன்றத் தேர்தல் : வாக்குப்பதிவில் புதிய சாதனை 

24 Apr, 2026 | 04:54 PM

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

17வது தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

4,023 வேட்பாளர்கள் களத்தில் இருக்க, நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் காலையிலிருந்து திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சியின் தலைவர்களும் பொது மக்களும் முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். சில இடங்களில் சிறிய அளவிலான மோதல் சம்பவங்களை தவிர்த்து பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்தது.

அந்த வகையில் காலை 9 மணிக்கு 17.6 சதவீத வாக்குகளும் , 11 மணிக்கு 37.5 சதவீத வாக்குகளும் பிற்பகல் ஒரு மணிக்கு 56.8% சதவீத வாக்குகளும், மூன்று மணிக்கு 70 சதவீத வாக்குகளும் , மாலை 5 மணிக்கு 82.2 சதவீத வாக்குகளும்.. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு 84.5% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது

அதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் சீல் இடப்பட்டு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மே நான்காம் திகதி காலை 8 மணி முதல் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த தருணத்தில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு 84 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86 சதவீதமும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 90 சதவீதமும், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92 சதவீதமும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.2 சதவீதமும், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்குத் தொகுதியில் 82 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் தீவிர சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் ஆறு கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர் .இந்த சீர்திருத்தத்திற்கு பிறகு தற்போது 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருந்தனர்.

இதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அதீத ஆர்வம் காட்டியதால் கடந்த 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் வாக்கு பதிவு அதிகரித்து சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட 12 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாகவும், பொது மக்களின் வாக்களிப்பு சதவீதம் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 9% அதிகரித்திருப்பதாகவும் தேர்தல் வியூக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தால்... ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்ற அவதானிப்பு இயல்பாக எழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் 92. 03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவின் போது பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சில வாக்குச்சாவடியை வாக்காளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் சில வாக்குச்சாவடிகளில் கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறுகிறது.   நன்றி வீரகேசரி 





அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் விருத்தில் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றம் 

Published By: Digital Desk 3

26 Apr, 2026 | 09:16 AM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை உயர்மட்ட ஊடகவியலாளர்களுக்கான விருந்து நிகழ்வின் போது, ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வருடாந்த வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குச்  சில நிமிடங்களுக்கு முன்னதாக, மண்டபத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரம்பையும்,  அவரது அமைச்சரவை உறுப்பினர்களையும் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரகசிய சேவை அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஆயுதங்களுடன் பாதுகாப்புச் சாவடியைக் கடந்து உள்ளே நுழைய முயன்ற ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப்,

"ஆயுதமேந்திய ஒரு நபர் அமெரிக்க அரசியலமைப்பைத் தாக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் நமது குடியரசைச் சீர்குலைக்க ஒரு கொலையாளி முயல்வது இது முதல் முறையல்ல. அமெரிக்கர்கள் அனைவரும் நமது கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்க உறுதியேற்க வேண்டும்." எகத் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் வெடிமருந்து வாசனையை உணர்ந்தோம். சத்தம் கேட்டவுடன் அனைவரும் மேசைகளுக்கு அடியில் பதுங்கினோம். அது ஒரு பயங்கரமான சூழல்.சுமார் 5 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. என சம்பவ இடத்திலிருந்த அல் ஜசீரா ஊடுகவியலாளர் கிறிஸ் ஷெரிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்படும் எத்தனையோ படுகொலை முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி 


No comments: