இலங்கைச் செய்திகள்

 திறைசேரி நிதி மோசடி: உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? - ஹர்ஷ டி சில்வா கடும் கண்டனம்

திறைசேரியின் கொடுக்கல் வாங்கலில் இணையத்திருட்டு; விசாரணைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

கடன் கொடுப்பனவு மோசடி குறித்து எமது அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அதிகாரிகள் விசாரணை - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தாம் தயாரிக்கும் ஆவணத்தின் அடிப்படையிலேயே அரசுடன் பேச்சுவார்த்தை - தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை

வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - இளங்குமரன் 


 திறைசேரி நிதி மோசடி: உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? - ஹர்ஷ டி சில்வா கடும் கண்டனம்

23 Apr, 2026 | 07:13 PM

(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளமை மற்றும் அது குறித்து நிதி அமைச்சு மௌனம் காப்பது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கியவர்களுக்கு ஐந்து முறை பணம் அனுப்பியும் அது போய்ச் சேராத நிலையில், நாடு 'தொழில்நுட்பக் கடன் மீறல்' நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், மார்ச் மாதமே இந்த மோசடி குறித்து குழு நியமிக்கப்பட்டிருந்தும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்திற்கு வெளியே இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டமை உண்மையில் கவலைக்குரியதாகும். அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் என்ற முறையில், இது குறித்து பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

திறைசேரியிலிருந்து கடன் தவணைப் பணம் செலுத்தப்பட்ட போது, இணையவழி ஊடுறுவல் ஊடாக நிதி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்துத் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அக்கடிதத்துக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது தொழில்நுட்பக் கடன் மீறலாக  கருதப்படும் அபாயம் உள்ளது. ஐந்து முறை பணம் செலுத்தப்பட்டும், கடன் வழங்கியவர்களுக்குச் சேராததால் அவர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பின்னரே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின்படி, நாட்டின் நிதி மீதான முழு அதிகாரமும் நிதி அமைச்சுக்கோ அல்லது நிதிக்குழுவுக்கோ அல்ல, பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது. கடந்த மூன்று சந்தர்ப்ப ங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவின் கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் தவிர்த்து வருகின்றனர். கசினோ ஒழுங்குமுறை, 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை மற்றும் திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஈட்டிய சர்வதேச நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் சீர்குலைத்துவிடக் கூடாது. அரச கடன் மேலாண்மை சட்டத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கடன் மேலாண்மை அலுவலகத்தின் மூலமே இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற வேண்டும். ஆனால், அந்த அலுவலகத்திற்கு அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வேண்டாம் எனத் நாம் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றோம்.

சமூக வலைதளங்களில் பரவும் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது போன்ற தகவல்கள் குறித்துத் நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. பொறுப்புள்ள ஒரு பதவியில் இருப்பதால் நிதி அமைச்சின் செயலாளரின் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கின்றேன். மார்ச் மாதமே இது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு காலம் இந்த விடயத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நிதி அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி 




திறைசேரியின் கொடுக்கல் வாங்கலில் இணையத்திருட்டு; விசாரணைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

23 Apr, 2026 | 07:14 PM

(எம்.மனோசித்ரா)

இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணத்தை, மின்னஞ்சல் ஊடுருவல் மூலம் மோசடி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய நிதி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய பணம் இணையக் குற்றவாளிகளால் மறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் திறைசேரி அதிகாரிகள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டின் நிதிப் பாதுகாப்பு குறித்து பரப்பப்படும் வதந்திகளை மறுத்துள்ள அவர், திருடப்பட்ட பணத்தை மீட்கும் பணிகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசாங்கம் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தவணையைச் செலுத்தும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திறைசேரிக்கும் அந்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கும் இடையே மின்னஞ்சல் வாயிலாகத் தகவல்கள் பரிமாறப்பட்ட போது, இணையக் குற்றவாளிகள் அந்தத் தகவல் பரிமாற்றத்திற்குள் ஊடுருவி, மின்னஞ்சல்களை ஹெக் செய்துள்ளனர். இதன் மூலம் உண்மையான கடன் வழங்குநருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மறித்து எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதேபோன்று இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் திருடுவதற்கு இந்த ஹெக்கர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், வங்கிக் கணக்கு எண்களில் மாற்றம் இருப்பதை திறைசேரி அதிகாரிகள் ஆரம்பத்திலேயே கவனித்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தெரிந்த உடனேயே திறைசேரி தரப்பிலிருந்து இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி அவசரப் பதில் பிரிவிற்கு முறைப்படி புகாரளிக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்த மோசடியில் திறைசேரி அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க, இரண்டு பிரதிச் செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்வாரியான விசாரணையும் நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின் அடிப்படையில், தகவல் பரிமாற்றத்தில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளாலும் பரப்பப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை. நாட்டின் நிதிப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது என்றும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

இணையக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், திருடப்பட்ட பணத்தை மீண்டும் மீட்பதற்குமான நடவடிக்கைகள் தற்போது மிக இரகசியமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதால், விசாரணைகள் முடியும் முன்னரே ஊடகங்களில் அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்பதால் அரசு நிதானமாகச் செயல்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.  பொதுமக்கள் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.   நன்றி வீரகேசரி 




கடன் கொடுப்பனவு மோசடி குறித்து எமது அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அதிகாரிகள் விசாரணை - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் 

23 Apr, 2026 | 05:22 PM

(நா.தனுஜா)

அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குச் செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கடன் வழங்கல் தரப்புக்குத் திருப்பிச்செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் மூன்றாம் தரப்பினரால் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு தரவு மாற்றப்பட்டு கணினி ஊடுருவல் மூலம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் வெளியக விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய முறைப்பாடு அளிக்கப்பட்டிருப்பதாகவும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த்,

அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்குச் செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகமும் இலங்கையின் நிதியமைச்சும் அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா தொடர்ந்து வழங்கும் என்றும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வெர்த் உறுதியளித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 



தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தாம் தயாரிக்கும் ஆவணத்தின் அடிப்படையிலேயே அரசுடன் பேச்சுவார்த்தை - தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை 

24 Apr, 2026 | 04:43 PM

(நா.தனுஜா)

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த 18 ஆம் திகதி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, 'இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்து செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்' என அதில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகும். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் எந்தவொரு விடயத்திலும் இரகசியத்தன்மை பேணப்படவேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே தமிழ்த்தேசியப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டு நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையிடம் அறிவித்திருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகிறது.   நன்றி வீரகேசரி 







வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - இளங்குமரன் 


24 Apr, 2026 | 06:20 PM

( எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணவேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1990ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறிய


நிலையில் இராணுவம் காணிகளை கையகப்படுத்தியது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சென்று, மக்களுடன் கலந்துரையாடினார்.

மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் கூறிய விடயங்களை கேட்டறிந்தார். அதன் பின் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் நாம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகின்றோம்.


மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும்.

எமது ஆட்சி மக்களுக்கானது. எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் எதுவும் இல்லை.

தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்” என்றார்.   


















நன்றி வீரகேசரி 






No comments: